சமூக வலைதள செய்திகளை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது குறித்தும், குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க பேஸ்புக், ட்விட்டர் நிர்வாகிகள் மத்திய தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு பேஸ்புக், ட்விட்டர் நிர்வாகிகள் ஆஜராகி விளக்கமளித்தனர். இக்கூட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய பாஜக எம்.பி., உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் முடக்கப்பட்டிருந்ததை குறித்து கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ட்விட்டர் நிர்வாகிகள், " அவரின் கணக்கு காப்பிரைட்(copyright) பிரச்னை காரணமாகவே முடக்கிவைக்கப்பட்டிருந்தது. விரைவில் அதனை சரிசெய்துவி்ட்டோம்" என தெரிவித்தனர்.
மேலும், வாட்ஸ்அப்பின் தனியுரிமை கொள்கை மாற்றம் தொடர்பாக பேஸ்புக் நிர்வாகிகளிடம் கூட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டது. பயனாளர்களின் தனியுரிமை சட்டம் நிச்சயமாக பாதுகாக்க வேண்டும் என குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.