நியூயார்க் : உள்ளூர் சட்டங்களுக்கு ஏற்ப கீழ்படிந்து நடக்க வேண்டியதை தவிர்த்து ட்விட்டர் நிறுவனத்திற்கு வேறு வழியில்லை என்றும் உள்ளூர் அரசுகளுக்கு கீழ் படியாவிட்டால் ட்விட்டர் நிறுவனத்தை மூட வேண்டிய சூழல் உருவாகும் என்றும் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் விவசாயிகள் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் அது தொடர்பாக பதிவிடப்படும் ஆதரவு கருத்துகளை ட்விட்டரில் இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை விமர்சித்து பத்திரிகையாளர்கள் போடும் ட்வீட்களையும் இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசால் மிரட்டப்பட்டதாக ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சி தெரிவித்தார்.
ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், இந்தியாவில் ட்விட்டர் தடை செய்யப்படும் என்றும் ட்விட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடக்கும் என மிரட்டப்பட்டதாக கூறினார். மேலும் ட்விட்டர் நிறுவனத்தை சேர்ந்த சிலரது வீடுகளில் சோதனை நடந்ததாகவும் ஜேக் டோர்சி தெரிவித்தார்.
இந்திய அரசின் மிரட்டல் காரணமாக தாங்கள் அவர்கள் சொன்னதை செய்ததாக ஜேக் டோர்சி தெரிவித்தார். ட்விட்டர் முன்னாள் தலைமை செயல் அதிகாரியின் கருத்துக்கு பதிலளித்த எலான் மஸ்க், உள்ளூர் அரசுகளுக்கு சமூக வலைதள நிறுவனங்கள் கீழ்படிந்து போவதை தவிர வேறு வழியில்லை என்றும், அப்படி கீழ்படியாவிட்டால் அந்த தளத்தை மூட வேண்டிய நிலை உருவாகும் என்று தெரிவித்தார்.
அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உள்ளூர் அரசு மற்றும் சட்டங்களுக்கு கீழ் படிந்து நடப்பது சிறந்தது என்றும் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
ஒவ்வொரு அரசாங்கங்களுக்கும் வெவ்வேறு வகையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இருப்பதாகவும் அந்தந்த சட்டத்தின் கீழ் சாத்தியமான மற்றும் சுதந்திரமான கருத்துகளை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றுன் எலான் மஸ்க் கூறினார். உலகில் அமெரிக்காவை மட்டும் ஒருவரால் பயன்படுத்த முடியாது என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.
ட்விட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களின் முதன்மையானவரான எலான் மஸ்க் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி பதவியை ஜேக் டோர்சி ராஜினாமா செய்தார். அண்மையில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், 2020 - 21 விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் அரசை விமர்சிக்கும் கணக்குகளை முடக்கக் கோரி இந்திய அரசிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறினார்.
ட்விட்டர் முன்னாள் சிஇஒ ஜேக் டோர்சியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஜேக் டோர்சியின் கருத்து அப்பட்டமான பொய் என்று கூறினார். மேலும் ட்விட்டருக்கு இந்திய சட்டத்தின் இறையாண்மையை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருந்ததாகவும், இந்திய சட்டத்திற்கு பொருந்தாதது போல் ட்விட்டர் நிறுவனம் நடந்து கொண்டதாகவும் கூறினார்.
இதையும் படிங்க : "ஜனநாயக திருவிழாவான 2024 தேர்தலை காண வாருங்கள்" - பிரதமர் மோடி அழைப்பு!