ஐதராபாத்: பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மற்றும் ரேடியா பாகிஸ்தானின் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது. அரசின் சட்டக் கோரிக்கையை அடுத்து பாகிஸ்தான் அரசு மற்றும் ரேடியோ பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளதாக அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டும் இதேபோல் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டது. தொடர்ந்து சில நாட்களுக்கு பின் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மீண்டும் இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, நீதிமன்றம் அல்லத்து முறையான சட்டப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட ட்விட்டர் கணக்கு முடக்க அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ட்விட்டர் கணக்கு திரும்பப் பெறப்படும் வரை இந்தியாவில் உள்ள எந்த ட்விட்டர் பயனரும், முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கை பார்க்க இயலாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபை, துருக்கி, ஈரான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களின் பல அதிகாரப்பூர்வ கணக்குகளை ட்விட்டர் முடக்கியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் பாகிஸ்தானை அடித்தளமாக கொண்டு இயங்கிய செய்தி சேனல் உள்பட 8 யூடியூப் சேனல்களை முடக்க உத்தரவிட்டது.
மேலும் போலியான மற்றும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த முகநூல் பக்கத்தை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் பிபிசி பஞ்சாபி செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டது. அரசின் சட்டக் கோரிக்கையை அடுத்து முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மறுநாள் மீண்டும் அந்த ட்விட்டர் கணக்கு முடக்கம் நீக்கப்பட்டது.
இதையும் படிங்க : H-1B visa: எச்-1பி விசாதாரர்களுக்கு ஒர் மகிழ்ச்சி செய்தி - அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு!