வாஷிங்டன்: டிவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர் எலான் மஸ்க் விலை கொடுத்து வாங்கியது முதலே, பல்வேறு சர்ச்சைகள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், நேற்று (பிப்.08) இரவு திடீரென டிவிட்டர் தளம் முடங்கியது. இந்த முடக்கத்தால் பல்வேறு சிக்கல்களைப் பயனர்கள் சந்திக்க நேரிட்டது.
ட்வீட் போட முடியாத சூழல், நேரடியாக மற்றவர்களுக்குத் தகவல் அனுப்புவது, புதிதாக கணக்குகளைப் பின்தொடர்வது உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு சிலர் புதிதாக ட்வீட்களை போட முயற்சித்த போது, தினசரி ட்வீட் உச்சவரம்பைத் தாண்டிவிட்டீர்கள் எனச் சமிக்ஞை வழங்கியதாகச் சொல்லப்படுகிறது.
மற்றவர்களை பின்தொடர முயற்சித்தவர்களுக்கு, பின்தொடருதலுக்கான வரம்பை தாண்டிவிட்டதாக சமிக்ஜை வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பயனர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. மேலும் ட்விட்டரின் ட்வீட் திட்டமிடல் செயல்பாட்டின் மூலம் பதிவுகள் வெளியிட முடிந்ததாக ஒரு சில பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இன்று (பிப்.09) காலை 5 மணி வாக்கில், நிலைமை சீராகி 9 ஆயிரம் ட்வீட்கள் ஒருசேரப் பதிவிடப்பட்டதாகவும், அதனால் அடுத்த அரை மணி நேரத்திற்கு தொழில்நுட்ப பிரச்சினைகளை டிவிட்டர் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இரு காரணி அங்கீகாரம் வழங்குவதால், இரண்டு முறை ட்வீட்கள் வெளியாவது உள்ளிட்ட சிக்கல்கள் குறித்து ஏற்கனவே பயனர்கள் புகாரளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாட்டிலே முதல் முறையாக திருநங்கை - திருநர் தம்பதிக்கு குழந்தை!