தெலங்கானா: ஹைதராபாத் நகரின் புறநகர் பகுதியான நர்சிங்கியில் ‘ஹரே கிருஷ்ணா’ இயக்கம் அமைப்பின் சார்பில் 400 அடி உயரமுள்ள ‘ஹரே கிருஷ்ணா’ பாரம்பரிய கோபுரம் (கோயில்) கட்டுவதற்கு, தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''ஒரு மனிதன் ஏதாவது ஒன்றில் வெற்றி பெற்றால், அதை அவன் தன் திறமை என்று கூறுகிறான். ஆனால், ஏதாவது ஒரு தவறு ஏற்பட்டால், அது கடவுளின் தவறு என்று கூறுகிறான்'' எனத் தெரிவித்தார். மேலும், ''ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை தொடர்ந்து பல்வேறு நல்ல திட்டங்களை செய்து வருகிறது. ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை நடத்தும் அக்ஷய பாத்ரா திட்டம் மிகவும் நன்றாக செயல்பட்டு வருகிறது.
ஐதராபாத்தில் பணக்காரர்கள் கூட இந்த அக்ஷய பாத்ரா திட்டத்தின் கீழ் இயங்கும் உணவகத்தில் ரூ. 5-யில் மதிய உணவு சாப்பிடுகிறார்கள். நேர்மை இருந்தால் மட்டுமே 'அக்ஷய பாத்ரா' போன்ற தொண்டுகளை நடத்த முடியும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''இந்த ஹரே கிருஷ்ணா கோபுரம் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. அதற்கான இரண்டு ஏக்கர் நிலங்களை ‘ஸ்ரீ கிருஷ்ணா கோ சேவா கவுன்சில்’ நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த கோபுரமானது ஹைதராபாத் நகரின் கலாசார அடையாளமாக நிற்கும்'' என்றார்.
'தெலங்கானாவின் பெருமை' திட்டமாக கட்டப்படும் இந்த ஹரே கிருஷ்ணா கோபுரம், காகத்திய, சாளுக்கிய, திராவிட பேரரசர்களின் கட்டடங்களின் பாணியில் கட்டப்படும் எனக் கூறப்படுகிறது. கோபுர வளாகத்தில் அமைக்கப்படும் நூலகம், அருங்காட்சிம், திரையரங்கு மற்றும் கூட்ட அரங்குகள், ஹாலோகிராம்கள் மற்றும் லேசர் புரொஜெக்டர்கள் போன்ற நவீன வசதிகள் மூலம் அனைவரிடமும் ஆன்மிகத்தைக் கொண்டு சேர்க்க வழி வகுக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை புதிய விமான முனையம் முழு பயன்பாட்டுக்கு வருவது எப்போது?