மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காலியாக இருந்த 10 இடங்களுக்கான தேர்தல் நேற்று(ஜூன் 20) நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் 5 வேட்பாளர்களும், ஆளும் சிவசேனா கூட்டணி சார்பில் 6 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
அதில் பாஜகவின் ஐந்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. பாஜகவின் வெற்றி ஆளும் சிவசேனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதற்கு காரணம், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 106 எம்எல்ஏக்களை மட்டுமே கொண்டுள்ள பாஜகவுக்கு ஆதரவாக 133 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, சுமார் 28 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததாக தெரிகிறது.
சிவசேனாவின் 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்தச் சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 11 எம்எல்ஏக்கள் இன்று காலை முதல் தொலைத்தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வரும் நிலையில், அவர்கள் அனைவரும் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏக்களை ஈர்ப்பதற்காக பாஜக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனிடையே மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சிவசேனா எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.