திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றார். அங்கு யுவம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் வந்தே பாரத் ரயில், வாட்டர் மெட்ரோ சேவைகளை தொடங்கி வைத்த அவர், டிஜிட்டல் அறிவியல் பூங்காவையும் திறந்து வைத்தார்.
முன்னதாக தனது வாகனத்தில் பேரணியாக சென்ற பிரதமர் மோடிக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் திரிச்சூரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் ஆன்லைனில் மாநில டிஜிபி அனில்காந்த் மற்றும் போக்குவரத்து துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், "கடந்த 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொச்சிக்கு வந்தார். இளைஞர்கள் பங்கேற்ற யுவம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன், தனது காரில் ஊர்வலமாக பயணித்தார். சுமார் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் ஊர்வலமாக சென்றார்.
பேரணியின் போது, பிரதமர் தனது காரின் கதவைத் திறந்து அதில் தொங்கியபடி மக்களைப் பார்த்து கையை அசைத்து பயணம் செய்தார். இது சாலை விதியை மீறிய செயல் ஆகும். ஓட்டுநருக்கு எதிரே சாலை தெரியாத அளவுக்கு, காரின் முன்பக்க கண்ணாடியில் பூக்கள் குவிந்து கிடந்தன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால், போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி திருவனந்தபுரம் சென்ற பிரதமர் விமான நிலையத்தில் இருந்து சங்குமுகம் சாலை வரை வாகனத்தில் பேரணியாக சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் குறித்து அவதூறு பரப்புகிறார்': அமித்ஷா மீது கர்நாடகாவில் போலீசில் புகார்