போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஷிப்ரா நதிக்கரை அருகே பாரம்பரிய கழுதை கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றும் (நவம்பர் 8) நாளையும்(நவம்பர் 9) கண்காட்சி நடக்கிறது. ஆரம்பம் முதலே விற்பனை சூடு பிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் பௌர்ணமி நாளன்று தொடங்கப்படுகிறது. நாடு முழுவதும் இருந்து பல்வேறு வகையான கழுதைகள் கொண்டுவரப்படுகின்றன.
அதேபோல வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கழுதைகளை விற்பனை செய்தோ வாங்கியோ செல்கின்றனர். கழுதைகளுடன் பல வகையான குதிரைகளும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இந்த கழுதைகள் மற்றும் குதிரைகளின் உடல்களில் சில வர்ணங்கள் பூசப்படுகின்றன. இது எந்த வகை என்பதை கண்டறிய செய்யப்படுகிறது. இந்த 2 நாள் கண்காட்சியை நம்பி பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் உள்ளனர். இதுகுறித்து உள்ளூர் கழுதை வியாபாரி பப்லு பிரஜாபதி கூறுகையில், "மத்திய பிரதேசத்தில் கழுதை வளர்ப்பு பாரம்பரிய தொழிலாகும். பல்வேறு மாநிலங்களுக்கு நாங்கள் நேரடியாக சென்று கழுதைகளை வாங்கி வந்து உஜ்ஜயினியில் விற்பனை செய்வோம். ஆண்டில் மற்ற நாள்களைவிட கண்காட்சி நாள்களில் எளிதில் கழுதைகள் விற்று தீர்ந்துவிடும்.
விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு இங்கு வியாபாரம் நடைபெறும் எனத் தெரிவித்தார். இதுகுறித்து மகாராஷ்டிராவிலிருந்து வந்த வாடிக்கையாளர் தாதாபாவ் கோட்டே ராவ் ஷிண்டே கூறுகையில், "நான் கழுதைகளை வாங்க 10 ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கிறேன். நான் சிறுவயதில் எனது அப்பா உடன் இங்கு வந்துள்ளேன். இப்போது நான் வருகிறேன். நாட்டில் 2 இடங்களில் மட்டுமே இவ்வளவு பெரிய கழுதை கண்காட்சி நடத்தப்படுகிறது. ராஜஸ்தானின் புஷ்கரிலும், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினிலும் நடைபெறுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல் வேட்டையை நடத்திய சிவிங்கி புலிகள்.. குனோ பூங்காவில் நடந்தது என்ன?