உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் அருகே உள்ள கந்தூரியில் நடைபெறும் கோயில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்நிலையில் புதன்கிழமை (ஆக.23) பலேலி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் டிராக்டரில் அந்த கோயில் திருவிழாவில் வழிபாடு செய்வதற்காகச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புதன்கிழமை முழுவதும் பெய்த மழை காரணமாக கோட்வாலி தேஹத் பகுதியில் உள்ள தமோலா ஆற்றில் நீர் அபாய கட்டத்தைத் தாண்டி காணப்பட்டு உள்ளது. ஆகையால் அந்த வழியாக செல்ல வேண்டாம் என டிராக்டர் பயணித்த பக்தர்கள் டிரைவரை எச்சரித்தாகக் கூறப்படுகிறது. ஆனால் அதனைப் புறக்கணித்துவிட்டு டிரைவர் டிராக்டரை ஆற்றில் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்ட வளைவை அடைந்த போது, அதிக நீரோட்டத்தின் காரணமாக டிராக்டர் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன் பின்னர் டிராக்டரில் பயணித்த பக்தர்களின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிராம மக்களால் சில பக்தர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், குழந்தை மற்றும் பெண் உட்பட 4 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர் காயமடைந்து மீட்கப்பட்ட பக்தர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மீட்புப் பணி இரவு முழுவதும் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று மேலும் 5 நபர்களின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இன்னும் சிலரின் தகவல்கள் தெரியவில்லை என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து டெஹாட் காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறியதாவது, மழையின் காரணமாக நீர் அபாய கட்டத்தை தாணடி பாயும் ஆற்றைக் கடந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது, மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். கோயிலில் தரிசனம் செய்வதற்காக சென்ற டிராக்டர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது; 20 நிமிடங்களில் விடுவிப்பு - நடந்தது என்ன?