இடுக்கி (கேரளா): கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள நெடுங்கண்டம் கல்லார் எல்பி பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை, சுகாதாரத்துறைக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக சுகாதாரப்பணியாளர்கள் குழு, பள்ளிக்குச் சென்று குழந்தைகளை பரிசோதனை செய்தது.
சோதனையின் முடிவில், மாணவர்களுக்கு தக்காளி காய்ச்சல் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இவர்களில் 14 எல்கேஜி குழந்தைகளுக்கும், 6 யூகேஜி குழந்தைகளுக்கும் தக்காளி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் படித்து வந்த மூன்று வகுப்புகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த மாணவர்களில் நெடுங்கண்டம் ஊராட்சியைச் சேர்ந்த 11 பேரும், பாம்பாடும் பாறை ஊராட்சியைச் சேர்ந்த 6 பேரும், கருணாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த 3 பேரும் உள்ளனர். தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உடல் நிலை திருப்திகரமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல் திருவனந்தபுரத்தில் நான்கு குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது. தக்காளி காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் காய்ச்சலின் அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சுகாதார நிபுணர்கள் கூறுகையில், “தக்காளி காய்ச்சல் குழந்தைகளுக்கு மிகவும் பொதுவானது. இது வைரஸால் ஏற்படுகிறது.
இந்த வைரஸ் பொதுவாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது. அதேநேரம் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் பாதிக்கிறது. காலநிலை மாற்றம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உடனான தொடர்பு மூலமும் பரவுகிறது. தக்காளி காய்ச்சல் வந்தால் கை, கால் மற்றும் வாயின் உள்பகுதியில் சிறு கொப்புளங்கள் தோன்றும். வாயில் உள்ள தோலில் அரிப்பு ஏற்படும்.
கால், கை வலி மற்றும் சிறுநீரக நோய் உள்ள குழந்தைகளை தக்காளி காய்ச்சல் பாதிக்கலாம். இருப்பினும் இந்த நோய் ஒரு வாரத்தில் தானாகவே மறைந்துவிடும். அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரின் சேவையை நாட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கருக்கலைப்பு, பக்கவாதத்திற்கு காரணமா? - பகீர் கிளப்பும் அதிர்ச்சி ரிப்போர்ட்!