டெல்லி: நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் (FASTag) என்ற மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஃபாஸ்ட் டேக் மூலம் சுங்கவரி வசூல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், 2022ஆம் ஆண்டில் ஃபாஸ்ட் டேக் சுங்க கட்டண வசூல் அதிகரித்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் 50,855 கோடி ரூபாய் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 46 சதவீதம் அதிகம் என்றும், கடந்த 2021ஆம் ஆண்டில் ஃபாஸ்ட் டேக் மூலம் 34,778 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் தினமும் சராசரியாக 134.44 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அதில், டிசம்பர் 24ஆம் தேதி அதிகபட்சமாக ஒரேநாளில் 144.19 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 6.4 கோடி ஃபாஸ்ட் டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில், ஃபாஸ்ட் டேக் முறை பயன்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 922 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 1,181 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் நடந்த வித்தியாசமான ஆட்டோ ரேஸ்!