டெல்லி: ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் 2020 போட்டிகள் டோக்கியோவில் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகளில் 54 இந்திய பாரா-தடகள வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதுகுறித்து, பிரதமர் மோடி நேற்று (ஆகஸ்ட் .16) தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரா ஒலிம்பிக் 2020 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்களுடன் ஆகஸ்ட் 17ஆம் தேதி உரையாட உள்ளேன்.
இவர்கள் அனைவரும் சிறந்த திறமை, விடா முயற்சியில் குறிப்பிடத்தக்கவர்கள். நாட்டு மக்களும், விளையாட்டு பிரியர்களும் நிகழ்ச்சியை காணுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி வீரர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாட உள்ளார். டோக்கியோ பாரா ஒலிம்பிக் 2020 போட்டிகள், ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.
அதில் கலந்துகொள்ள இந்திய வீரர்களுடன் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செல்கிறார். கரோனா பரவல் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகளைபோலவே, பாரா ஒலிம்பிக்கிலும் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாரா ஈட்டி எறிதலில் புதிய சாதனை!