மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று(மே.28) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், "கரோனா தடுப்பூசிகள், ரெம்டெசிவர் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கரோனா காரணமாக 2021-22-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும். மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை மத்திய அரசு நினைவில் கொள்வது சிறப்பாகும். மத்திய அரசுக்கு என்று தனியாக வாக்களார்கள் இல்லை. மனக்கசப்புடனும், வேண்டா வெறுப்புடனும் நன்கொடையாளராக மத்திய அரசு செயல்பட முடியாது. ஜிஎஸ்டியை முழுமையாக மாற்றியமைப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். ஜிஎஸ்டியை மாற்றி அமைக்கவில்லை எனில் எதிர்காலத்தில் பெரும் இழப்பை சந்திக்க நாம் சந்திக்க வேண்டிய நேரிடும்.
சரக்கு மற்றும் சேவை வரியை அவசரமாகச் செயல்படுத்திய காரணத்தால், ஜிஎஸ்டி அமைப்பின் கட்டமைப்பு குறைபாடுகளைக் கொண்டுள்ளது. சிலவற்றை நான் குறிப்பிடுகிறேன்
1. ஜிஎஸ்டி கட்டமைப்பின் உரிமை, இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு மாதிரியை மீண்டும் பரிசீலனை செய்து வலுப்படுத்த வேண்டும்.
2. ஜிஎஸ்டி கட்டமைப்பின் வடிவமைப்பின் காரணத்தால், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அக்கட்டமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைப்பது கடினமாகிறது. உள்ளீடுகள் அல்லது உள்ளீட்டு வரவுகளுடன் தொடர்புடைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும்.
3. தனித்தனியாக இயங்கும் கண்காணிப்பு / அமலாக்க மாதிரி (மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆய்வாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு இடையில்) எளிமைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவேண்டும்.
4. கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் கொண்ட சட்டங்களை விதித்துள்ளதன் மூலம் அமைப்பிலுள்ள குறைபாடுகளை ஈடுசெய்யும் உத்தி, சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர் மற்றும் மதிப்பீட்டாளர்களைத் அதற்கெதிராக சிந்திக்கத் தூண்டியுள்ளது.
5. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் ஒரு கணக்கில் நிதி திரட்டுவது மற்றும் திரட்டப்பட்ட நிதியில் மாநிலங்களின் பங்கினை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தின் காரணத்தால், மாநில அரசுகளுக்கு விரக்தியும் கோபமும் ஏற்படுகிறது. இதனால், மாநில அரசுகள், சட்டப்படியாக தங்களுக்கு கிடைக்கவேண்டிய நிதிப் பங்கினைப் பெறுவதற்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
6. ஜிஎஸ்டி செயலகத்தின் வடிவமைப்பு, இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு மாதிரியை மீண்டும் பரிசீலித்து, பல மடங்கு வலுப்படுத்த வேண்டும்.
7. கூட்டத்திற்கு முன் எந்த ஒரு கலந்துரையாடலும் இல்லாமல், அல்லது, ஒருமித்த கருத்தை அடைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல், ஒவ்வொரு பிரச்சினையும் ஜிஎஸ்டி மன்றத்திற்கு கொண்டுவரப்படும் தற்போதைய செயல்முறை பலவீனமாக உள்ளது. மேலும், 10 நபர்களைக் கொண்ட இந்த குழு அதிகபட்சம், மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் கூடுகிறது. ""மன்றத்தின் ஒப்புதல்"" என்ற இறுதி இலக்கை நோக்கி இன்னும் தொடர்ச்சியான, செயல்திறன் கொண்ட மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வழிமுறைகளை கொண்டு சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பு இயங்க வேண்டும். அலுவல் ரீதியிலான குழுக்கள் தொடர்ந்து சந்திக்க வேண்டும்.
8. மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறைகளுக்கு மாற்றாக, ஊக்ஷஐஊயின் வரி ஆராய்ச்சி பிரிவு போன்ற, ஜிஎஸ்டி மன்றத்திற்கு நேரடி தொடர்பில்லாத அமைப்புகளுக்கு அதிக அளவில் அதிகாரம் அளிப்பது, அரசியலமைப்பின்படி சட்டபூர்வமான தன்மை மற்றும் அடிப்படைத் திறன் ஆகிய கேள்விகளை எழுப்புகின்றது.