டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியர் தினேஷ் திரிவேதி. இவர் கடந்தாண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (பிப்.12) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி தினேஷ் திரிவேதி தனது பதவியை மாநிலங்களவையில் இன்று ராஜினாமா செய்தார். முன்னதாக அவர் பேசுகையில், “வங்கத்தில் நடக்கும் வன்முறை, ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். இந்நிலையில், நான் இங்கு அமர்ந்திருப்பது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. இதற்கு எதிராக நான் எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ரவீந்திரநாத் தாகூரை நினைத்துப் பார்க்கிறேன். கட்சியின் கட்டுப்பாட்டுக்கு அனைவரும் கீழ்படிய வேண்டும். என் மாநிலத்துக்கு எதுவுமே செய்யாமல், நான் இங்கிருந்து என்ன பயன்? நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.
நான் எனது மாநிலத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். அங்கு சென்று மக்களுக்காக பணி செய்ய போகிறேன்” என்றார். இதைத்தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவிடம் ஒப்படைத்தார். இதற்கிடையில் தினேஷ் திரிவேதியின் பின்னணி குறித்து மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை பாராட்டி தினேஷ் திரிவேதி ட்வீட் செய்துள்ளார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தினேஷ் திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தினேஷ் திரிவேதி ராஜினாமா குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சௌகதா ராய் கூறுகையில், “இது துரதிருஷ்டவசமானது. அவர் பதவியை ராஜினாமா செய்தது வருத்தம் அளிக்கிறது. அவர் அதிருப்தியில் இருந்தார் என்பதை நான் அறிவேன், ஆனால் ஏன் ராஜினாமா செய்தார் என்பது எனக்கு தெரியாது” என்றார்.
இதற்கிடையில் தினேஷ் திரிவேதியின் ராஜினாமாவை பாஜக வரவேற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்தத் தலைவர் கைலாஷ் விஜய்வர்ஜியா, “நாங்கள் தினேஷ் திரிவேதியை மனதார வரவேற்கிறோம். திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலக அவர் ஒரு ஆண்டு எடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
பராக்பூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியான தினேஷ் திரிவேதி 2019 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் அர்ஜூன் சிங் வெற்றிபெற்றார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் ஆவார். இதனால் தினேஷ் திரிவேதி கடும் அதிருப்தியில் இருந்தார். இதையடுத்து அவருக்கு கடந்தாண்டு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பாஜக எம்.பியின் மனைவி