டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர், வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில், டெல்லி பார் கவுன்சில் (BCD) அவரை இடைநீக்கம் செய்ததோடு, இரு குழுக்களுக்கு இடையேயான மோதலில் அவரது நடத்தை குறித்து வழக்கறிஞர்களிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டு உள்ளது.
திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் வைரலான வீடியோவை டெல்லி பார் கவுன்சில் தானாக முன்வந்து எடுத்துக் கொண்டது. ஓய்வு பெற்ற கர்னல் அதிகாரியும், டெல்லி பார் கவுன்சிலின் செயலாளர், இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்துக் கொண்டு உள்ளார்.
இதுதொடர்பாக, பார் கவுன்சில் செயலாளர் துப்பாக்கிச்சூடு நடத்திய மணீஷ் சர்மாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில், வழக்கறிஞராக பயிற்சி செய்வதற்கான உரிமத்தை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும், "அந்த வீடியோவில், உங்களது அடையாளம் தெளிவாக உள்ளது. அதேநேரம் சம்பந்தப்பட்ட மற்ற வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கறிஞராக இருக்கும் நீங்கள், நீதிமன்ற வளாகத்திற்குள் வன்முறையில் ஈடுபடுவது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் மோசமான நடத்தை" என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
டெல்லி பார் கவுன்சில் விதிகளின் பிரிவு 42-இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கறிஞர் மணீஷ் சர்மா ஜூலை 7ஆம் தேதி பார் கவுன்சிலில் ஆஜராகி எழுத்துப்பூர்வ விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதனை அவர் தவிர்க்கும் பட்சத்தில், சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
டெல்லி பார் கவுன்சில் தலைவர் கேகே மனன் கூறியதாவது, “இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட சிலரின் அடையாளம் காணப்பட்டு உள்ளது. ஒரு வழக்கறிஞரின் உரிமம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, டெல்லி பார் அசோசியேஷன் (DBA) நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. இக்கூட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், நடைமுறையை அறியவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்திற்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில், டெல்லி பார் அசோசியேஷன் தலைவர் நிதின் அஹ்லாவத் கூறியதாவது, "இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்து உள்ளார்.
"டெல்லி பார் கவுன்சில், நாட்டின் மிகப் பழமையான பார் கவுன்சில். அதன் மாண்பு குறித்து தற்போது கேள்வி எழுந்து உள்ளது. இது போன்ற சட்ட விரோத செயலைச் செய்ய யாருக்கும் அனுமதியில்லை. இதில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில், வழக்கறிஞர் மணீஷ் சர்மா, தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த சில நாட்களாக, எனக்கும் டெல்லி பார் கவுன்சில் செயலாளர் அதுல் குமார் ஷர்மாவுக்கும் இடையே, பார் தொடர்பான பல பிரச்னைகள் நடந்து கொண்டிருந்தன.
நேற்று இரவு அதுல் சர்மா என்னை அழைத்தார். அவரது சகோதரரும், அவரும் என்னை அழைத்து அவதூறாக நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்துவதாக மிரட்டினர். இப்படியெல்லாம் சண்டை போட்டவர்கள் மீதும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீதும் நீதிமன்றத்தில் புகார் செய்வேன். அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் என்னிடம் உள்ளது. நான் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை'' என தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - தென்னக ரயில்வே தகவல்