மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கைப் படுமோசமாக ஏறிக் கொண்டே போகிறது. சரியாகச் சொல்வது என்றால், 2021 மார்ச் 1ஆம் தேதி அன்று மட்டுமே நாட்டில் 15,500 நோய்த்தொற்று பதிவாகி உள்ளது.
பிணங்களின் குவியல்கள்
அந்தத் தேதியிலிருந்து இன்றுவரை கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 12 மடங்கு உயர்ந்திருக்கிறது. மயானத்தில் ஒற்றைச் சிதைப்படுக்கையில் மட்டும் எட்டு பிணங்கள் எரிக்கப்பட்ட ஈமச்சடங்குக் காட்சிகள் மகாராஷ்டிராவிலும், ராய்ப்பூரிலும் அரங்கேறி இருக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் பிணங்களின் குவியல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
கோவிட் என்னும் கொடுமையான, கடுமையான தொற்றுநோயை அலட்சியப்படுத்தினால் அதற்கு நாம் என்ன விலை கொடுக்க வேண்டிவரும் என்பதைத்தான் இந்தச் சூனியச்சூழல் நமக்குப் புரியவைக்கிறது.
திருமணம் முதல் தேர்தல் வரை
கடந்தாண்டு எட்டிய உச்சக்கட்ட நிலையையும் இந்தாண்டு கோவிட் தொற்று தாண்டிவிடும் என்று மத்திய அரசு கூறுகிறது. மோசமான, கவலைக்கிடமான இந்த நிலைக்கு கரோனா வழிகாட்டு நெறிகளைக் காற்றில் பறக்கவிட்டது, உள்ளூர்த் தேர்தல்களை நடத்தியது, திருமணம் உள்ளிட்ட பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகளில் அதிக கூட்டங்களைக் கூட்டியது ஆகியவைதான் காரணங்கள் என்று மத்திய அரசு (நடுவண் அரசு) கருதுகிறது.
கும்பமேளாவும் கரோனாவும்
கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது கடைப்பிடிக்கப்பட்ட கோவிட் நியதிகள் இந்தாண்டு எங்கே போயிற்று, கடவுள் பக்தி கரோனா தீநுண்மியை விரட்டிவிடும் என்ற நம்பிக்கையில் கும்பமேளா ஆரம்பமானது. ஆனால் கும்பமேளாவைப் போன்ற நிகழ்வுகளில் கூடும் பெருங்கூட்டம் கோவிட் தொற்றின் வீரியத்தை மேலும் அதிகரிக்கக் கூடியது.
அலட்சிய மனப்பான்மை
தடுப்பு மருந்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடைவதற்கு முன்னமே, தடுப்பு மருந்துதான் வந்துவிட்டதே என்ற அதீத நம்பிக்கையால் விளைந்த அலட்சிய மனப்பான்மை எல்லா அரசுகளுக்கும் ஏற்பட்டுவிட்டது. இந்த அலட்சிய மனப்பான்மையின் விளைவுதான் தற்போதைய கோவிட்டின் அதீத வீரியமும், அச்சுறுத்தும் அலையடிப்பும்.
குடிமக்களின் அலட்சியத்தோடு, கரோனா வைரசின் உருமாற்றங்களும் இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் நடந்ததைப் போலவே, இந்தாண்டும் மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், பிராணவாயு ஆகியவற்றின் பற்றாக்குறை நாட்டைக் கலங்கவைத்துக் கொண்டிருக்கிறது.
தடுப்பு மருந்து
ஸ்புட்னிக்-வி, பிற வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
மருத்துவச் சேவைத் துறையை வீழ்ந்துவிடாமல் காப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அதே வேளை மருந்துத்தொழில் துறையோடு கலந்து ஆலோசித்து கோவிட் உலகத் தொற்றுக்கு எதிரான ஒரு பல்முனைத் தாக்குதலை அரசு தொடுக்க வேண்டிய நேரம் இதுதான்.
உலகத்தின் தலைநகரம் இந்தியா - நகைமுரண்
உலகத்தின் தடுப்புமருந்து தலைநகரம் என்று இந்தியா கருதப்படுகிறது. ஆனால் அப்படியோர் கீர்த்திவாய்ந்த நாட்டில் வெறும் 0.7 விழுக்காடு மக்கள் மட்டுமே கரோனா தடுப்பு மருந்து டோஸ் எடுத்திருக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரண்.
மொத்த மக்கள் தொகையில் 6 விழுக்காட்டினர் மட்டுமே ஒரேயொரு தடுப்பு மருந்து டோஸை எடுத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 50 லட்சம் டோஸ்கள் கொடுக்கப்பட்டால் ஒழிய கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
இந்த உலகத்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் மந்தகதிக்குக் காரணங்கள் மக்களின் மனங்களிலிருந்து தேவையற்ற அச்சத்தை, பதற்ற உணர்வை நீக்காமல்விட்ட தோல்வி, மாநிலங்களுக்குப் போதுமான அளவுக்குத் தடுப்பு மருந்தை வழங்காமல் விட்ட தோல்வி ஆகியவைதான் என்று நிதர்சனமாகத் தெரிகின்றன.
அரசு படுவேகமாகச் செயல்பட வேண்டும்
கரோனாவுக்கு எதிரான யுத்தத்திற்குத் தயாராக மனித உடலை வைத்திருப்பது தடுப்புமருந்துதான் என்ற உண்மையை, மேலும் தடுப்பு மருந்து உயிருக்கு ஏற்பட்டிருக்கிற அச்சுறுத்தலைத் தவிர்க்கக் கூடிய ஆற்றல் கொண்டது என்ற நிஜத்தை, மக்களிடம் பரப்புவது அரசுகளின் கடமை ஆகும்.
தடுப்பு மருந்தைப் பெருங்கொண்ட அளவில் தயாரிப்பதற்காக உள்நாட்டுத் தடுப்பு மருந்து உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் ஏற்கனவே நிதியுதவி கேட்டுள்ளனர். மத்திய அரசும் மிஷன் கோவிட் சுரக்ஷா திட்டத்தின்கீழ் தடுப்பு மருந்து ஆராய்ச்சியிலும், தடுப்பு மருந்து மேம்படுத்தலிலும் ஈடுபட்டிருக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு தனது பட்ஜெட்டில் ரூபாய் 35,000 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறது. என்றாலும் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசிப் போடும் பணியை அரசு முடுக்கிவிட்டு படுவேகமாகச் செயல்பட வேண்டும்.
பிவிட்ஜர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தயாரித்த தடுப்பு மருந்துகளின் விலைகளைக் கட்டுப்படுத்துவதோடு, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பு மருந்து அமெரிக்காவில் கிளப்பி இருக்கும் மருத்துவச் சர்ச்சையையும் அரசு மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.
தேடிப் போகும் மத்திய அரசு
கோவிட்டுக்கு எதிரான போருக்குத் தேவைப்படும் பிராணவாயு இருப்பிற்காக எஃகு உருக்காலைகளையும், எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்களையும் தேடிப் போகும் மத்திய அரசு ரெம்டெசிவிர் போன்ற கரோனா மருந்துகளைப் பதுக்கிவைக்கும் பழக்கத்தையும் தடுத்து நிறுத்த ஏராளமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
இது காலத்தின் கட்டாயம்
கண்ணுக்குத் தெரியாத தீநுண்மிக்கு எதிராக நடக்கும் இந்த யுத்தத்தில் குறைந்தபட்ச உயிரிழப்போடு நாம் வெற்றிபெற வேண்டும் என்றால், மெத்தனத்திற்கும் பொறுப்பின்மைக்கும் இடங்கொடுக்காமல் குடிமக்களும், மாநில அரசுகளும், நடுவண் அரசாங்கமும் கைக்கோத்து ஒன்றிணைந்து கடுமையாகப் போராடியே தீர வேண்டும். இது காலத்தின் கட்டாயம்!