ஜெய்சல்மர்: ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் இந்திய ராணுவத்தினர் வருடாந்திர ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த பயிற்சியின் போது இந்திய ராணுவத்தினர் ஏவுகணைகளை ஏவி சோதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏவுகணை இடைமாறிச் சென்று வெடித்து சிதறியது.
மூன்று ஏவுகணைகள் இடைமாறிச் சென்று வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அஜாசர் கிராமத்திற்கு அருகில் உள்ள கச்சாப் சிங் வயல்வெளியிலும், மற்றொரு ஏவுகணை சத்யயா கிராமத்தின் அருகில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த இரண்டு இடங்களில் விழுந்த ஏவுகணைகளை இந்திய ராணுவத்தினர் மற்றும் போலீசார் மீட்டனர். மூன்றாவது ஏவுகணை வீசப்பட்ட நிலையில் அதன் பாகங்களை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஏவுகணை விழுந்த விபத்துக்குள்ளான இடத்திற்கு உடனடியாக விரைந்த காவல் துறை மற்றும் ராணுவ அதிகாரிகள் விழுந்து நொறுங்கிய ஏவுகணைகளின் பாகங்களை மீட்டு ஆய்வுக்கு உட்படுத்தினர். அதேநேரம் இந்த விபத்தில் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அமிதாப் சர்மா கூறுகையில், பொக்ரான் களத்தில் வழக்கமான ஆண்டு ராணுவ போர் பயிற்சியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 3 ஏவுகணை இடைமாறி வெடித்து சிதறியது. இதில் வயல்வெளி மற்றும் கிராம பகுதிகளுக்குள் விழுந்த ஏவுகணை உதிரிபாகங்கள் மீட்கப்பட்டன. மீதுமுள்ள ஏவுகணை பாகத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கவனக்குறைவில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகாத்மா காந்தி ஒரு பட்டம் கூட பெறவில்லை.. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்..