போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றிற்கு, அனசுயா(12), சுகானி (13), சந்தா(12) ஆகிய மூன்று சிறுமிகள் சென்றுள்ளனர். இவர்கள் தங்களது எருமை மாடுகளுக்கு தண்ணீர் காட்டுவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது எருமைகளுக்கு தண்ணீரை காட்டிவிட்டு, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். எதிர்பாராதவிதமாக மூவரும் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கியுள்ளனர். சிறிது நேரம் கழித்து இரண்டு சிறுமிகளின் உடல் ஆற்றில் மிதப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், போலீசார் மற்றும் மீட்புப்படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புப் படையினர் இரண்டு சிறுமிகளின் உடல்களை மீட்டனர். மூன்றாவது சிறுமியின் உடலை கண்டுபிடிக்க முடியாமல் மீட்புப் படையினர் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் அப்பகுதி மக்களும் மீட்புப் படையினருடன் சேர்ந்து மூன்றாவது சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு நாளுக்கும் மேளாக தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், மூன்றாவது சிறுமியின் உடல் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. ஒரேநேரத்தில் மூன்று சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: பாட்டியாலாவில் இரு தரப்பினரிடையே மோதல்- இணைய சேவை முடக்கம்