மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் தாதர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட புதுச்சேரி விரைவு ரயில், நேற்றிரவு (15-4-2022) மாட்டுங்கா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென தடம் புரண்டது. இதில் மூன்று ரயில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து பக்கவாட்டில் சாய்ந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பயணிகளுக்கு காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை எனத் தெரிகிறது. இந்த விபத்து காரணமாக, அந்த தடத்தில் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தாதர்- புதுச்சேரி விரைவு ரயிலை, சிஎஸ்எம்டி-கடக் விரைவு ரயில் பக்கவாட்டில் லேசாக மோதியதாகவும், அதன் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் ரயில்வே அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், விபத்துக்கு முன்னதாக, ரயில்கள் ஒன்றோடொன்று மோதும்படி வருவதையும், இதைக்கண்ட பயணிகள் அலறியடித்து ஒருவருக்கொருவர் எச்சரிப்பதையும் காணலாம்.
இது மகாராஷ்டிராவில் இம்மாதத்தில் நடந்த இரண்டாவது ரயில் விபத்தாகும். கடந்த 3ஆம் தேதி நாசிக் அருகே பவன் விரைவு ரயில் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரிட்டிஷாரிடம் கைகட்டி நின்றது ஆர்எஸ்எஸ்- திக் விஜய் சிங்!