பெங்களூரு : கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த நபர், பாகிஸ்தான் வங்கியில் 50 லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் குறிப்பிட்ட 7 நீதிபதிகளை கொல்வேன் என்றும் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.
அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், கர்நாடக உயர் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு, நீதிமன்றத்தின் 6 நீதிபதிகளைக் கொன்று விடுவதாக வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயர் நீதிமன்றத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி கே.முரளிதருக்கு ஜூலை 12 ஆம் தேதி இரவு 7 மணியளவில் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த வாட்ஸ் அப் பதிவில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகமது நவாஸ், எச்.டி. நரேந்திர பிரசாத், அசோக் ஜி நிஜகன்னவர், எச்.பி.சந்தேஷ், கே.நடராஜன் மற்றும் பி.வீரப்பா ஆகிய 6 நீதிபதிகளைக் கொன்று விடுவேன் என மர்ம நபர் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாங்கள் துபாய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், பாகிஸ்தானில் உள்ள வங்கிக் கணக்கில் 50 லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் 6 நீதிபதிகளையும் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களுரு சைபர் கிரைம் போலீசில் முரளிதர் புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து கடந்த ஜூலை 14ஆம் தேதி சைபர் கிரைம் காவல் துறையினர், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மெசேஜ் எங்கிருந்தது வந்தது யார், அனுப்பினார்கள், அனுப்பியவர்களின் ஐபி முகவரி என்ன என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Qin Gang : சீன வெளியுறவு அமைச்சர் மாயம்? வெளியான அதிர்ச்சி பின்னணி?