வயநாடு: கேரள மாநிலம், புல்பள்ளி அருகே உள்ள பெரிக்கல்லூரில் வசித்து வந்த மேரி என்ற பெண்மணிக்கு, தபால் ஒன்று வந்துள்ளது. அதில் அனுப்புநரின் பெயர், முகவரி எதுவும் இல்லை. அதனை திறந்து பார்த்தபோது, அதில் ஒரு கடிதமும், 2 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்துள்ளது.
அந்த கடிதத்தைப் பார்த்த மேரி வியந்துபோனார். காரணம் அது ஒரு திருடனின் மன்னிப்புக் கடிதம். பல ஆண்டுகளுக்கு முன்பு திருடியதற்காக மன்னிப்புக் கோரி எழுதப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தில், "அன்புள்ள சகோதரி மேரிக்கு, நான் பல ஆண்டுகளுக்கு முன்பு, உங்களது கணவர் ஜோசப்பிடம் 700 ரூபாய் மதிப்புள்ள பொருளைத் திருடிவிட்டேன். இப்போது அந்த பொருளின் மதிப்பு இரண்டாயிரம் ரூபாய் இருக்கும். அந்த தொகையை நான் இந்த கடிதத்துடன் அனுப்பியுள்ளேன். இந்த பணத்தை பெற்றுக்கொண்டு என்னை மன்னித்துவிடுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை படித்த மேரி, திருடனின் மன மாற்றத்தை எண்ணி நெகிழ்ந்தார். திருடனை மன்னித்துவிட்டதாக தெரிவித்தார். மேரியின் கணவர் இறந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதால், திருடன் யார் என்பதை மேரியால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க:video:ரக்ஷாபந்தன் ஸ்பெஷல் ஸ்வீட் பாலுஷாஹி செய்முறை வீடியோ