கலாபுரகி : கர்நாடகாவில் திருட்டு வழக்கில் கைது செய்ய வந்த போலீசாரிடம் இருந்தே துப்பாக்கியை திருடி மரத்தில் தலைமறைவாக இருந்த கொள்ளையரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் அப்சல்பூர் தாலுகா பலுராகி கிராமத்தை சேர்ந்தவர் கஜப்பா கைக்வாட். கஜப்பா மீது கர்நாடகா, மகாரஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் மட்டும் பெங்களூரு, அப்சல்பூர், கலாபுரகி, உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், திருட்டு வழக்கு ஒன்றில் கஜப்பாவை போலீசார் கைது செய்ய சென்றதாக கூறப்படுகிறது. சோனா கிராமத்தில் காரில் அமர்ந்திருந்த கஜப்பாவை சுற்றிவளைத்த போலீசார், அவரை கைது செய்ய முற்பட்டுள்ளனர். அப்போது கஜப்பா கார் கண்ணாடியை மூடிக் கொண்டு வெளியே வர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கைது நடவடிக்கைக்காக சென்ற உதவி காவல் ஆய்வாளர் பிமாராய் பங்காலி, தன்னிடம் இருந்த துப்பாக்கியை கொண்டு காரின் கண்ணாடியை உடைத்து உள்ளார். அப்போது பிமாராய் கையில் இருந்த துப்பாக்கியை பறித்துக் கொண்ட கஜப்பா தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கஜப்பாவை பல்வேறு இடங்களில் தேடியும் போலீசார் கையில் சிக்கவில்லை. இதனால் தொடர்ந்து திங்கட்கிழமை காலையும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். உதவி காவல் ஆய்வாளர் பிமாராயின் துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பப்பட்டு இருந்ததால் அதை வைத்து கஜப்பா தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு விடக் கூடாது என்ற கவனத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புறநகர் பலுராகி கிராமத்தின் அருகே ஒரு மரத்தில் கஜப்பா அமர்ந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கஜப்பாவை மரத்தில் இருந்து கீழே இறங்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். மரத்தை விட்டு கீழே இறங்கி வந்தால் போலீசார் தன்னை சுட்டு விடுவார்கள் என அஞ்சுவதாகவும் அதேநேரம் ஒரு அடி போலீசார் முன்னோக்கி வந்தால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஏறத்தாழ 5 மணி நேர போராட்டத்திற்கு பின் கஜப்பாவை சரி கட்டிய போலீசார் மரத்தை விட்டு கீழே இறங்க வைத்து கைது செய்தனர். போலீசாரின் கைத்துப்பாக்கியை திருடி இரண்டு நாட்கள் போலீசாருக்கே கொள்ளையர் தண்ணி காட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : சரத் பவாருடன் மீண்டும் சந்திப்பு.. 24 மணி நேரத்தில் 2வது முறை! அஜித் பவார் திட்டம் என்ன?