தும்கூர் (கர்நாடகா): நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் சனிக்கிழமை (மே 13) அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் முதலமைச்சர் பதவிக்கான நபர் அறிவிக்கப்படாமல் உள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், முதலமைச்சர் பதவிக்கான நபரை அறிவிக்காமலே தேர்தலில் களமிறங்கியது தான் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸில் செல்வாக்கு பெற்ற சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் காங்கிரஸின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்கிற நோக்கில் காங்கிரஸ் முதலமைச்சர் பதவிக்கான நபரை அறிவிக்காமல் தேர்தலைச் சந்தித்தது. இதனால் அவர்கள் எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ் பெரும்பன்மை வெற்றி பெற்றாலும் முதலமைச்சரை அறிவிப்பதில் இன்னமும் இழுபறி நீடிக்கிறது.
சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என இருவரில் ஒருவரை முதலமைச்சராக அறிவித்தால் மற்ற ஒருவர் கட்சியில் உள்ள பிற எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு ஆட்சி அமைப்பதில் பிரச்னையை ஏற்படுத்தக் கூடும் என்பதால் காங்கிரஸ் உயர்நிலைக் குழு இருவரில் ஒருவரை முதலமைச்சராகவும், மற்றொருவரை துணை முதலமைச்சராகவும் அறிவித்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் அரியணைக்கான கோதாவில் மூன்றாவதாக களமிறங்கி இருக்கிறார், பரமேஷ்வர். இவர் ஏற்கனவே கடந்த காங்கிரஸ் ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்தபோது, தான் பட்டியலின சமூகத்தவர் என்பதாலே தனக்கு முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்டதாகவும், அதற்கு சித்தராமையா தான் காரணம் எனவும் கூறி இருந்தார். இந்நிலையில் இப்போதும் இவர் முதலமைச்சருக்கான கோதாவில் இறங்கி இருப்பது காங்கிரஸுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கொரட்டகெரே தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை முதலமைச்சருமான பரமேஷ்வரை முதலமைச்சராக ஆக்கக் கோரி, துமகூருவில் காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டி போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
தும்கூர் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பத்ரம்மா வட்டம் வரை சென்றனர். பின்னர் பரமேஷ்வரை முதலமைச்சர் பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என காங்கிரஸின் உயர் நிலைக் குழுவிற்கு கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே, கர்நாடக முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் முனைப்புக் காட்டி வரும் நிலையில் தற்பொழுது பரமேஷ்வரும் கோதாவில் குதித்திருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சித்தராமையா முதலமைச்சர்: முதலமைச்சர் தேர்வில் எந்த தடையும் இல்லை, அனைத்தும் சுமூகமாக உள்ளது. சித்தராமையா 100% முதலமைச்சராக வருவார் என்பதில் நான் நம்பிக்கையுடன் உள்ளேன் என மதுகிரி எம்எல்ஏ கேஎன் ராஜண்ணா கூறினார். தும்கூரில் பேசிய அவர், தனக்கும் உயர்நிலைக் குழு சாதகமாக உள்ளது என்றார். மேலும் ’’உயர்நிலைக் குழு அனைவரையும் அழைத்து முடிவெடுக்கும், இதற்கு சிவகுமாரும் ஒத்துழைப்பார் என்று நம்புகிறோம். முதலமைச்சர் விவகாரம் இன்றே இறுதி செய்யப்பட வேண்டும்’’ என தெரிவித்தார்.
மேலும், அமைச்சரவை அமைப்பது குறித்து பேசிய ராஜண்ணா, “அமைச்சரவை அமைப்பது சற்று தாமதமாகலாம்’’ என்றார். தற்போது ’’சித்தராமையா தனியாக பதவியேற்பார். முதல் நாள் அமைச்சரவையிலேயே 10 கிலோ அரிசி அறிவிக்கப்படும் அன்னபாக்யா யோஜனா திட்டத்தை செயல்படுத்துவதுதான் முதல் முடிவு” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ’’நான் அமைச்சராக வேண்டும். அதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. மதுகிரி மாவட்டமாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். நான் சொன்னபடி நடப்பவன். மதுகிரி மாவட்டமாக இருக்கும். எனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
பின்னர் பாஜகவின் தோல்வி குறித்துப் பேசிய அவர், ’’40% கமிஷன், விலைவாசி உயர்வு போன்றவற்றால் தான் பாஜக தோற்றது. இங்குள்ள பாஜக மாநிலத் தலைவர்களுக்கு வாக்குகளை ஈர்க்கும் சக்தி இல்லை. நான்கு ஆண்டுகளில் ஒரு பொதுப்பணியைக் கூட பாஜக கொடுக்கவில்லை. அவர்கள் தோற்றதற்கும் இட ஒதுக்கீடும் ஒரு காரணம் தான். இதனால் மக்கள் பாஜக அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்தனர். கர்நாடக மாநிலத்தில் மோடி அலை வீசவில்லை’’ என்றார்.