கர்நாடக மாநிலம் தாவனகெர் நகரத்தில் உள்ள தோலாஹனசே என்ற கிராமம் ஒரு காலத்தில் பருத்தி ஆலைகளுக்குப் புகழ்பெற்றது. இந்தக் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அல்லது நான்கு நபர்கள் நாட்டிற்காகச் சேவையாற்றிவருகிறார்கள்.
வீரர்களின் கிராமம்
இந்தக் கிராமம், 'வீரர்களின் கிராமம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிராமத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, துணை ராணுவப் படைகளுக்குச் சேவை செய்கின்றனர்.
இந்தக் கிராமத்தின் மக்கள்தொகை சுமார் நான்காயிரம் ஆகும். கிராமவாசிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் வாழ்வாதாரத்திற்காக கிராமத்திற்கு வெளியே வசிக்கின்றனர்.
கிராமத்தின் சுவாரஸ்ய கதை
இந்தக் கிராமத்தில் ஏராளமான வீரர்களுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. 1994இல் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர்ந்தனர். அவர்களால் ஊக்கப்படுத்தப்பட்ட 240-க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்கள், நாட்டிற்குச் சேவை செய்யும் பாதுகாப்புப் படையின் பல்வேறு பிரிவுகளில் சேர்ந்தனர்.
இதில் 30 பேர் ஏற்கனவே நாட்டிற்கான தங்களது முத்தான சேவையை நிறைவு செய்துவிட்டு இப்போது ஓய்வு பெற்றுவருகின்றனர். அவர்கள் இளைஞர்களை ராணுவத்தில் சேருமாறு ஊக்குவிக்கின்றனர்.
கனவு நனவாக...
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்திய ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.), மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்.) போன்றவற்றில் பணியாற்றிவருகின்றனர்.
இக்கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ளோரும் இளைஞர்கள் ஆயுதப் படையில் சேருவதை தாங்கள் ஒருபோதும் தடுக்க மாட்டோம் என நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். அதற்குப் பதிலாக அவர்கள் நாட்டுக்குச் சேவை செய்வதற்கான கனவை நனவாக்க உதவுகிறார்கள்.
ஒரு இறப்புகூட இல்லை!
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, 1994 முதல் இன்றுவரை, இந்தக் கிராமத்தைச் சேர்ந்த எந்த ஒரு வீரரும் ராணுவப் போரின்போது நாட்டின் எந்தப் பகுதியிலும் இறக்கவில்லை என்ற ஒரு செய்தி கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
இதையும் படிங்க:உலகத்தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்கும் ராணுவ அகாதமி!