புதுச்சேரி மாநில ஐஎன்டியுசி தலைவர் ரவிச்சந்திரன் திருவுருவப் படத்திறப்பு விழா சொக்கநாதன் திருமண மண்டபதில் நடைபெற்றது. இதில் அகில இந்திய ஐஎன்டியுசி தலைவர் சஞ்சீவரெட்டி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், கர்நாடக ஐஎன்டியுசி தலைவர் பிரகாசம், தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைவர் ஜெகநாதன், புதுச்சேரி ஐஎன்டியுசி தொழிற்சங்க நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து புதிய தலைவராக பாலாஜி என்பவரை அறிவித்தனர். தொடர்ந்து சஞ்சீவரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், "நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துவருகிறது.
பொதுத் துறை நிறுவனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம், ஒன்று லாபம் தரும் நிறுவனங்கள், மற்றொன்று இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள். இதில், இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்களை தனியார் பங்களிப்புடன் சீர்ப்படுத்தலாம்.
ஆனால், லாபம் ஈட்டும் நிறுவனங்களையும் மத்திய அரசு மூடுவது ஏற்புடையதல்ல; இதனை ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய, மாநில தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றன.
மத்திய அரசு 30 விழுக்காடு நிரந்தர ஊழியர்கள், 60 விழுக்காடு ஒப்பந்த ஊழியர்கள் என்ற நிலை ஏற்படுத்துகிறது. தொழிலாளர்களின் ஊதியம் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும் என்பதை ஐஎன்டியுசி வலியுறுத்துகிறது.
தொழிலாளர்கள் விஷயத்தில் மத்திய அரசு தவறான கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. ரயில்வே, நிலக்கரி, காப்பீடு நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கிறது.
இதனால், பொதுத்துறை தனியார்மயம், தொழிலாளர் விரோத நடவடிக்கையைக் கண்டித்தும், ஆகஸ்ட் 7ஆம் தேதி டெல்லியில் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்துப் போராட உள்ளோம்" என்று தெரிவித்தார்.