டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்வதற்கு அனுமதி அளித்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் இன்று (04.08.2023) மறுப்புத் தெரிவித்துள்ளது.
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி. இந்த மசூதியில் தொல்லியல் துறை அறிவியல் ரீதியான ஆய்வு மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதற்கு அனுமதி வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடைவிதிக்கக்கோரியும் அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் நிர்வாகக் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மசூதியின் பிரதிநிதிகள் குழுவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஹுசெபா அஹ்மதி ஞானவாபி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்வதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இவரின் வாதம் மற்றும் தொல்லியல் துறையின் விளக்கம் அதனுடன் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின் குறிப்புகள் அத்தனையும் ஒப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவில் வேறுபாடான கருத்து இல்லை எனவும்; தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ஞானவாபி மசூதிக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் ஆய்வு மட்டுமே நடத்தப்படும் என்ற தொல்லியல் துறையின் விளக்கத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அங்கு அகழ்வாராய்ச்சி நடத்தப்படாது என்றும் சுவர்களுக்கோ கட்டடத்திற்கோ எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் தொல்லியல் துறை தங்கள் ஆய்வை மேற்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் ஞானவாபி மசூதியின் கட்டமைப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அதற்கு உச்ச நீதிமன்றம் பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் நீதிபதிகள் உறுதி தெரிவித்தனர். ஞானவாபி மசூதி இந்து கோயிலுக்கு மேல் கட்டப்பட்டிருப்பதாகவும், அதற்கு அருகில் கட்டப்பட்டுள்ள இந்து கோயில் அதற்குப் பின்பு எழுப்பப்பட்டது எனவும்; அதன் உண்மைத் தன்மையை அறிய வலியுறுத்தி இந்து பெண்கள் ஐந்து பேர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றம், மாநில உயர் நீதிமன்றம் எனக் கடந்து உச்ச நீதிமன்றத்தைச் சென்றடைந்திருக்கிறது. மதங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் என இரண்டிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த வழக்கு தீர்வை எட்ட வேண்டும் என்ற நிலையில் இந்து மற்றும் இஸ்லாமியர்களின் மத நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்தின் கையில் இருக்கும் நிலையில், நீதிமன்றம் இன்று இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: மார்கதர்சி சிட் பண்ட் நிறுவன வழக்கு: ஆந்திராவுக்கு மாற்றும் முடிவு தேவையற்றது - உச்ச நீதிமன்றம்