புதுச்சேரி: புதுச்சேரி அரசும் என்.எல்.சி. நிறுவனமும் இன்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.தலைமை செயலகத்தில் மின் துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் என்.எல்.சி இயக்குனர் ஷாஜி ஜான், புதுச்சேரி அரசின் மின்துறை செயலர் அருண் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
புதுச்சேரியின் எதிர்கால தேவைக்காக ஒடிசா மாநிலத்தின் என்.எல்.சி நிறுவனத்தில் இருந்து 100 மொகா வாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது, இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரிக்கு 470 மெகா வாட் மின்சாரம் தேவை, தற்போது 500 மெகா வாட் மின்சாரம் கிடைப்பதால் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.
மின்தடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது. எதிர்கால தேவையை கருதி 100 மெகாவாட் கொள்முதல் செய்ய என்.எல்.சியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டிய மின் பாக்கியை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மற்ற மாநிலங்களை விட புதுச்சேரியில் தான் மின்கட்டணம் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் கடந்த மாதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு இல்லை' - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம்