கேரளா: பாலக்காடு அட்டப்பாடி அருகேவுள்ள கடுகுமன்னா பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பவானி ஆற்றின் மறு கரையில் அமைந்துள்ள இந்த பகுதிக்குச் செல்ல சரியான சாலை வசதி மற்றும் உயர் மட்ட பாலம் இல்லாததால் பவானி ஆற்றைக் கடக்க இப்பகுதி மக்கள் தொங்கு பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தொங்கு பாலத்தைக் கடந்தாலும் சாலை வசதியில்லாததால் மூன்றரை கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக நடந்து
சென்றால் மட்டுமே மற்ற பகுதிக்குச் செல்ல முடியும். இந்நிலையில் சனிக்கிழமை இரவு அக்கிராமத்தில் உள்ள முருகன் என்பவரின் மனைவி சுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது கணவர் முருகன் இது குறித்து உடனடியாக அவசர ஊர்திக்குத் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், சாலை வசதியில்லாததாலும், யானை நடமாட்டம் இருந்ததாலும் கிராமத்திற்கு வரமுடியாததால் அருகிலுள்ள ஆனவாய் வரை மட்டுமே வர முடியும் என அவசர ஊர்தி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து முருகனின் உறவினர்கள் மூங்கிலில் போர்வையைக்கொண்டு தொட்டில் கட்டி, அதில் கர்ப்பிணி சுமதியை படுக்க வைத்து மூன்றரை கிலோமீட்டர் தூக்கிக் கொண்டு ஆனவாய் பகுதிக்குச் சென்றனர். தொடர்ந்து அங்கு தயாராக இருந்த அவசர ஊர்தி மூலம் கோட்டத்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சுமதிக்கு சுகப்பிரசவத்தின் மூலம் பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் சாலை வசதி இல்லாத நிலையில் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்றுவர அனுமதிகோரி விவசாயி மனு - ஷாக்கில் அலுவலர்கள்