ஹைதராபாத்: ரங்காரெட்டி மாவட்டம், குண்ட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா(21). இவர் கரோனா தொற்று தடுப்பூசி செலுத்துவதற்காக, கடந்த வியாழன் அன்று (ஜூன்.17) பெடா அம்பர்பேட்டையில் உள்ள ஜில்லா பரிஷாத் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றுள்ளார்.
செவிலியின் அலட்சியம்
அங்கு பத்மா என்ற செவிலி தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுவருகிறார். அப்போது, லட்சுமிக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும்போது செவிலி பத்மா செல்போனில் பேசி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து லட்சுமி, செவிலியின் சமிக்ஞைக்காக காத்திருந்தார். செல்போனில் உரையாடிக் கொண்டிருந்த பத்மா, லட்சுமிக்கு இரண்டாவது முறையும் தடுப்பூசி போட்டுவிட்டு, இயல்பாக தன் பணியை தொடர்ந்துள்ளார்.
தீவிர காய்ச்சல்
ஒரே நேரத்தில் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தி கொண்டதால், லட்சுமிக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அவருக்கு தீவிர காய்ச்சல் வரவே, வனஸ்தலிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சைக்கு பின்னர், உடல் நலம் தேறிய அவரை நேற்று (ஜூன்.19) மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக மாவட்ட சுகாதார நிலைய அலுவலர் ஸ்வராஜ்யலட்சுமி கூறும்போது, அந்த பெண்ணுக்கு இரண்டு முறை தடுப்பூசி செலுத்தியது உறுதியாகவில்லை என்றும், மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கடலுக்கு அடியில் மர்ம தீவு... ஆச்சரியத்தில் நிபுணர்கள்!