காசர்கோடு (கேரளா): காசோர்கோடு அனந்தபுரம் அனந்தபத்மநாபசுவாமி கோயில் ஏரியின் முதலை ’பாபியா’ நேற்று(அக்.9) மறைந்தது. ஏறத்தாழ 75 ஆண்டுகளாக கோயில் ஏரியில் இருந்த முதலை பக்தர்களுக்கு இன்றும் தீரா புதிராகவே உள்ளது.
பாபியாவிடம் உள்ள ஓர் வித்தியாசமான குணம் என்னவென்றால், இது ஒரு சைவ முதலை. இந்த முதலை குளத்தில் உள்ள எந்த ஒரு மீனையும் உண்பதில்லை. பக்தர்கள் தரும் அரிசி உணவைத் தான் உண்ணுமாம். மேலும், இந்த முதலை அடிக்கடி பக்தர்களுக்கு காட்சியளிப்பது அரிது எனவும் தெரிவிக்கின்றனர்.
ஏரியிலிருந்து எப்போதாவது தான் கரைக்கு வந்து பாபியா காட்சியளிக்குமாம். சில ஆண்டுகள் முன்பு பாபியா முதலை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் காணொலி இணையத்தில் வைரலானது. இந்த ஏரியில் முன்பு இருந்த முதலையை பிரிட்டிஷார் சுட்டுக்கொன்றனர்.
அதற்குப்பின்னரே, இந்த ஏரிக்கு பாபியா வருகை தந்துள்ளது. பாபியா எங்கிருந்து வந்தது என்பது எவருக்கும் தெரியாது. ஆனால், இந்த முதலை ஆபத்து தராத ஓர் ஜீவனாகவே அந்த ஏரியில் இருந்து வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டின்போது, பாபியா இறந்துவிட்டதாக வதந்தி ஒன்று பரவலானது. அதை மறுத்த கோயில் நிர்வாகம், பாபியா இன்னும் உயிருடன் தான் இருப்பதாகத் தெரிவித்தது.
இந்த அனந்தபத்மநாபசுவாமி கோயில் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயில் ஏரிக்கு நடுவில் கட்டப்பட்டது. இருப்பினும், கனமழை பொழியும் காலகட்டங்களிலும் இந்தக் கோயிலைச்சுற்றியுள்ள நீரின் அளவு அதிகரித்ததில்லை. இந்த ஏரியின் இடது புறத்தில் ஒரு குகை வழி இருப்பதாகவும், அது திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லும் எனவும் இதிகாசக் கதைகளில் குறிப்பிடுகின்றனர்.
இந்தக் கோயில், திருவனந்தபுரத்திலுள்ள புகழ்பெற்ற பத்பநாப சுவாமிக்கோயிலின் தாய்க் கோயிலாக கருதப்படுகிறது. இதிகாசக்கதையின் படி, இந்தக் கோயிலிலுள்ள குகையின் வழியே திருவனந்தபுரம் வரை சென்ற விஷ்ணு அங்கு களைப்பாடி, படுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அதனால் தான் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் படுத்த நிலையில் விஷ்ணு சிலை உள்ளது எனவும் நம்பப்படுகிறது. இத்தகைய கோயிலில் 75 ஆண்டுகாலமாக வாழ்ந்து வந்த முதலையான பாபியாவின் உயிரிழப்பிற்கு அம்மாநில மக்களும், பக்தர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய பெண் மும்பையில் கைது