கர்நாடகா: கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் ஹர்ஷ்வர்தன், 4-ம் வகுப்பு மாணவர் நிரந்த் இருவருக்கும் எலக்ட்ரானிக்ஸ் கோடிங் கற்பதில் ஆர்வம் உள்ளது. இவர்கள் இருவரும் மருத்துவமனைகளில் ஏற்படும் ஆள்பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்களை போக்குவதற்காக போராடி தொழில்நுட்பத்தைக்கற்றுக் கொண்டு ட்ரான்ஸ்போர்ட் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் உருவாக்கியுள்ள ரோபோ, மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ்களில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மருத்துவ உபகரணங்களைக்கொண்டு வந்து தருவது உள்ளிட்டவற்றை செய்யும் என்றும், எப்போதும் செவிலியர்களைப் பின்தொடர்ந்து அவர்களது மருத்துவ சேவைக்கு உதவிபுரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு, செவிலியர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இந்தச் சூழலை பார்த்த பிறகுதான் ரோபோவை உருவாக்கும் எண்ணம் தோன்றியதாக மாணவர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
இதேபோல், அவசர காலத்தில் நோயாளியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும், மருத்துவமனை போக்குவரத்து அமைப்பை உருவாக்கியுள்ளதாக மாணவர் நிரந்த் கூறினார். தொடக்கத்தில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் என்பது இயந்திரவியல் தொடர்பானது மட்டுமே என்று நினைத்தேன். ஆனால், அதில் எலக்ட்ரானிக், புரோகிராமிங் உள்ளிட்டவையும் அடங்கும் என்று தெரிந்து கொண்டு, புரோகிராமிங் படித்து இந்த ரோபோவை உருவாக்கியதாக நிரந்த் தெரிவித்தார். புரோகிராமிங் கற்பது மிகவும் சுவாரசியமாக இருந்ததாகவும், இதுபோன்ற பல சிறிய செயல்திட்டங்களை செய்துள்ளதாகவும் நிரந்த் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தடுமாறிய ஹெலிகாப்டர் - சாமர்த்தியமாக தரையிறக்கிய பைலட்!