ஹைதராபாத்: மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவின் பிதார் மாவட்டத்தில் உள்ள வரவட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருக்கு ஏழு வயதாக இருக்கும்போது, அப்போதைய ஹைதராபாத் நிஜாமின் தனிப்படையினர், அவரது தாயையும் சகோதரியையும் உயிருடன் எரித்ததை பார்த்தவர். அதன் பிறகுதான் தனது சொந்த ஊரைவிட்டு வெளியேறினார். அன்று முதல் இன்று வரை போராட்டம் என்பது, கார்கேவின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கார்கே, முதல்முதலாக கர்நாடகாவின் குர்மித்கல் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். 1972 முதல் 2008ஆம் ஆண்டு வரை குர்மித்கல் எம்எல்ஏவாக இருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவிடம் தோல்வியடைந்தார். எட்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், இரண்டு முறை எம்.பி.யாகவும் இருந்த போதிலும், கட்சியில் உயர் பதவிக்கு வருவதற்கு அவர் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
கார்கே தனது வாழ்நாள் முழுவதும் காந்தி குடும்பத்துக்கும் காங்கிரஸுக்கும் விசுவாசமாக இருந்தார். கண்ணியமும், அனுபவமும் கொண்ட அரசியல்வாதியாக திகழ்ந்த கார்கே, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு முறையும் முதலமைச்சராக்கப்படுவோம் என காத்திருந்தார். ஆனால், காங்கிரசின் அனைத்து ஆட்சிகளிலும் அவருக்கு அமைச்சகத்தில் முக்கிய இலாக்காக்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன, முதலமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
2004ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைத்தது. அப்போதும் முதலமைச்சர் பதவிக்காக கார்கே காத்திருந்த நிலையில், அது தரம் சிங்கிற்கு வழங்கப்பட்டது. அதேபோல் 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த கார்கேவுக்கு மிகுந்த ஏமாற்றத்தை காங்கிரஸ் கட்சி தந்தது. அப்போது, சித்தராமையா முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கர்நாடக அரசியலில் பொதுவாக லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகர்கள் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுவர். அந்த நிலையில், கர்நாடக அரசியலில் பட்டியலினத்தவரான கார்கேவின் அரசியல் வளர்ச்சி என்பது சீராக இல்லை.
கார்கே 1972ஆம் ஆண்டில் தேர்தல் அரசியலில் நுழைந்தபோதும், அவர் காந்தி குடும்பத்துடன் நெருக்கமாவதற்கு 40 ஆண்டுகளுக்கும் மேலானது. 2009 மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகாவில் பாஜக காலூன்றியிருந்தது. அதனால் வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை காங்கிரஸ் கட்சி தேடியது. அப்போதுதான் கார்கே அவர்களுக்கு தென்பட்டார். கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கார்கே போட்டியிட்டார். 2009 மற்றும் 2014 என இரண்டு முறை அந்த தொகுதியில் கார்கே வெற்றி பெற்றார். 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை மக்களவையில் காங்கிரஸின் முகமாக அவர் பங்காற்றியது அவரை காந்தி குடும்பத்துடன் நெருக்கமாக்கியது. அதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநில காங்கிரசின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. பிறகு பொதுக் கணக்குக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடம் கிடைக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் மற்றும் காந்தி குடும்பத்தின் மீதான அவரது விசுவாசம் ஒருபோதும் குறையவில்லை. அந்த விசுவாசத்திற்கு இறுதியாக தற்போது ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் அங்கீகாரத்திற்காக ஏழு வயதில் அவர் தொடங்கிய போராட்டத்திற்கு, மிகவும் தாமதமாகவே இந்த இடம் கிடைத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
"எனது தந்தையின் தேடல் என்பது சமநிலையை நோக்கியது, அவர் கொள்கையில் சமரசம் செய்யாதவர், தனது முழு பலத்தையும் தாண்டிதான் போராடுகிறார்" என்ற கார்கேவின் மகன் பிரியங்கின் கூற்று கார்கேவின் போராட்டத்தை எடுத்துரைப்பதற்கு சரியானது என்று கூறலாம்.
இதையும் படிங்க: அடுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் யார்...? இன்று வாக்கு எண்ணிக்கை...