போபால்: நமீபியாவில் இருந்து கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசம் குணோ தேசிய பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த சிவிங்கி புலி சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்ததாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் இனம் அழிந்து 70 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், மீண்டும் அந்த இனத்தைக் கொண்டு வரும் முயற்சியில், கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் மத்தியப் பிரதேச மாநிலம் குணோ - பால்பூர் தேசிய பூங்காவிற்குக் கொண்டு வரப்பட்டன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிவிங்கி புலிகளை வனப் பகுதிக்குள் பிரதமர் மோடி விடுவித்தார். 8 சிவிங்கி புலிகள் ஒன்று ஷாஷா. இந்நிலையில் ஷாஷா பெண் சிவிங்கி புலி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த ஷாஷா பெண் சிவிங்கி புலி, நோயின் தீவிரத் தன்மை காரணமாக உயிரிழந்ததாகப் பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ஷாஷா(Sasha) சிவிங்கிப் புலி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த சிவிங்கி புலியைக் கூட்டத்தை விட்டு தனிமைப்படுத்திய மருத்துவர்கள் அதற்குத் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஷாஷா சிவிங்கி புலி உயிரிழந்தது. மீதமுள்ள சிவிங்கி புலிகளின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தனி கவனிப்பில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : Saudi Iran Peace: சவுதி - ஈரான் ஒப்பந்தம்; சீனாவின் யுக்தி, இந்தியாவின் நிலைப்பாடு என்ன? - சிறப்பு அலசல்!