புதுச்சேரி: பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளர் சையத் இப்ராஹிம், புதுச்சேரி சிறுபான்மைப் பிரிவு தலைவர் விக்டர் விஜயராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, பேசிய சையத் இப்ராஹிம் கூறியதாவது, 'பாஜக தேசியச் செயலாளராக சிறுபான்மை அணிக்கு மத்திய தலைமை என்னை தேர்வு செய்துள்ளது.
இதனையொட்டி தென்னிந்திய மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் பாஜக கொள்கைகளை விளக்க சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். அதன் அடிப்படையில் புதுச்சேரி வந்து சிறுபான்மைப்பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினேன். சிறுபான்மை மக்களுக்கு ஒன்றிய அரசு கொடுக்கும் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க பல வியூகங்களை வகுத்துள்ளோம்.
மரியாதை நிமித்தமாக ஆளுநர்,சபாநாயகரை சந்தித்து வாழ்த்து பெற்றேன். கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி புதுச்சேரி மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கு எந்த நலனும் செய்யவில்லை. அவர்களை பின்னடைவு அடையச் செய்துள்ளனர்.
வக்பு போர்டு சொத்துகள் கொள்ளை
வக்பு போர்டு நிர்வாகிகளை நியமிக்கவில்லை. மைனாரிட்டி கமிஷன் அமைக்கவில்லை. அதுமட்டுமல்லது ஹஜ் கமிட்டியின் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை. இஸ்லாமியர்களின் வக்பு வாரியத்தை முறையாகப் பரமரிக்கவில்லை.
அதில் நிர்வாகிகளை நியமிக்கவில்லை. வக்பு சொத்துகளை காங்கிரஸ் திமுக அமைச்சரவையில் இருந்தவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
புதிதாக அமைந்துள்ள முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு வக்பு சொத்தை சூறையாடியதை பறிமுதல் செய்யும்.
பாஜக இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி எனத் தொடர்ந்து காங்கிரஸ் கூறி வருகிறது. கடந்த ஆட்சியில் கிறிஸ்தவ பள்ளிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி பெற்றுத்தரவில்லை. சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசாக காங்கிரஸ் செயல்பட்டு வந்துள்ளது. ஆர்எஸ்எஸ்-ஐ கடினமாக எதிர்த்த திமுக தற்போது ஆர்எஸ்எஸ் மக்களுக்கான இயக்கம் எனக் கூறியுள்ளது. இதனை பாஜக வரவேற்கிறது.
பாஜக ஆட்சியில் மதகலவரங்கள் இல்லை
புதுவையில் பாஜக ஆட்சி கைப்பற்றவில்லை, திருடியுள்ளது என தமிழ்நாடு அமைச்சர் பேசியுள்ளார். ஆர்எஸ்எஸ் தீவிரவாத இயக்கம் எனக் கூறுகிறார்கள்.
நான் வெளிப்படையாக காங்கிரஸை கேட்கிறேன் ஆர்எஸ்எஸ் வந்த பிறகு தான் நாம் அனைவரும் பாரத தாயின் பிள்ளைகள் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது. காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதம் அதிகமாக நடந்தது.
டெல்லி, குஜராத் கலவரம் காங்கிரஸ் ஆட்சியில் தான் நிகழ்ந்தது. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 7 ஆண்டுகளில், மதக்கலவரம் ஏற்பட்டுள்ளது என இதுவரை ஒரு புகாரேனும் வந்துள்ளதா?
சரியான பிரதிநிதித்துவத்தை பாஜக வழங்கும்
இந்துத்துவா சித்தாந்தத்தை அனைவருக்கும் புரிய வைப்பதுதான் எங்களது தலையாயப் பணி. பாஜக சாதி மதங்களை பார்ப்பதில்லை. தொண்டர்கள் தேசத்திற்கு எவ்வளவு தொண்டாற்றுகிறார் என்பதை மட்டுமே பாஜக பார்க்கும்.
புதுவையில் சிறுபான்மை மதத்தில் இருந்து ஒரு எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு அமைச்சரவையில் பதவி கொடுக்கவில்லை என ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.
இதற்கும் சம்மந்தப்பட்ட எம்எல்ஏவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அவரே கூறியுள்ளார். பாஜகவின் மத்திய தலைமையின் செயலை மட்டுமே அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாஜக கட்டுக்கோப்பான கட்சி, அமைச்சரவையில் பொறுப்பு இல்லை என்றால் அவருக்கான வேறு பொறுப்பு கண்டிப்பாக கொடுக்கப்படும்.
அவர் மூலம் மக்கள் நலத்திட்டங்களை செயல்பட செய்ய வைக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு சரியான பிரதிநிதித்துவத்தை பாஜக வழங்கும்.
ஹஜ் புனித பயணத்தை ரத்து செய்திருப்பது ஒன்றிய அரசு அல்ல; சவூதி அரேபிய அரசு. சவூதி அரேபிய அரசே ஹஜ் பயணத்தை அனுமதிக்கவில்லை.
அதனால் தான் ஹஜ் பயணம் தடைபட்டுள்ளது. இறைவனின் அனுகூலம் இருந்தால் அடுத்த ஆண்டு ஒன்றிய அரசின் ஒத்துழைப்போடு ஹஜ் பயணம் செல்ல முடியும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் சிறுபான்மை நிர்வாகிகளுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படும்' இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஈரானின் புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!