புதுச்சேரி: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையின்போது வெளிநடப்பு செய்த சம்பவத்திற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியின் உருவ பொம்மையினை எரித்து போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி, காமராஜர் சிலை முன்பு ஒன்று கூடிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ரவியின் உருவப்படத்துடன் அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் இன்று (ஜன.10) ஈடுபட்டனர். போராட்டத்தின் நடுவே சிலர் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100-க்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறுகையில், 'தமிழ்நாடு மக்களின் உணர்வுக்கு எதிராக பேசி வரும் ஆர். எஸ். எஸ். ஆர்.என். ரவி உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும். அதுவரை இந்தப் போராட்டம் தொடரும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஆளுநரை திரும்பப் பெறுவதே மத்திய அரசுக்கு நல்லது' - டிடிவி தினகரன் ஓபன் டாக்