கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் பெரும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்க, ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. தேர்வில் 68 சதவீத மதிப்பெண் பெற்றவருக்கு, 72 சதவீதமாக மதிப்பெண்ணை உயர்த்த லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், தேர்வு எழுதியவர்களிடம் இருந்து குந்தால் கோஷ் என்பவர் மொத்தமாக ரூ.19.2 கோடியை வசூலித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இச்சம்பவத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜிக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் தன்னிடம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை நடத்தக் கூடாது என உத்தரவிட கோரி, அபிஷேக் தரப்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த வியாழக்கிழமை விசாரித்த உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அபிஷேக்கிடம், ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-க்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அபிஷேக்கிற்கு நேற்று சம்மன் அனுப்பிய சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு இன்று (மே 20) நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில் கட்சியின் பாதயாத்திரையில் பங்கேற்றிருந்த அபிஷேக், அதை பாதியில் நிறுத்திவிட்டு, சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜரானார். இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு கருதி சிபிஐ அலுவலக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பின்னர் சிபிஐ அலுவலகத்தில் அபிஷேக் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தில், "விசாரணைக்காக நான் ஆஜராக, 24 மணி நேரத்துக்கும் குறைவான நேரமே வழங்கப்பட்டிருந்தது.
யாத்திரையில் பங்கேற்றிருந்தாலும், இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதற்காக ஆஜராகியுள்ளேன். என்னிடம் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். அந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என கருதுகிறேன். சட்டங்களுக்கு உட்பட்டே நான் செயல்பட்டு வருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குந்தல் கோஷ், சிபிஐ நீதிமன்றத்துக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், இந்த வழக்கில் அபிஷேக்கிற்கும் தொடர்புள்ளதாக கூறும்படி என்னை சிபிஐ அதிகாரிகள் வற்புறுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். அபிஷேக் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதை பொறுத்தே அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Aryan Khan Case : சமீர் வான்கடே மீதான நடவடிக்கைக்கு தடை - சிபிஐக்கு முட்டுக்கட்டை போட்ட மும்பை உயர் நீதிமன்றம்!