ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு மசூதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பம்பூர் ஜூலை 1ஆம் தேதி சோபூர், 2021ஆம் ஆண்டு சோபியான் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கு மசூதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள், மசூதி நிர்வாகம், சமூக அமைப்புகள், ஊடகங்கள் ஆகியோர் இம்மாதிரியான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, சோபியான் மாவட்டத்தில் மசூதிக்குள் மறைந்திருந்த ஐந்து பயங்கரவாதிகளை என்கவுன்டர் மூலம் பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.
கடந்த ஜூன் 19ஆம் தேதி, பம்பூர் என்கவுன்டரின்போது ஜாமியா மசூதிக்குள் மூன்று பயங்கரவாதிகள் மறைந்திருந்தனர். அவர்களைக் கண்டறிந்து, ராணுவ வீரர்கள் கொன்றனர்.