பூஞ்ச் : ஜம்மு காஷ்மீர், பூஞ்ச் மாவட்டம் தனமண்டி - சூரான்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடுத்து இந்திய ராணுவம், உள்ளூர் பாதுகாப்பு படையுடன் இணைந்து கூட்டு ஆபரேஷனில் ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் வேட்டையில் ஈடுபட்டு உள்ள ராணுவ வீரர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் கூடுதல் வீரர்கள் இந்திய ராணுவத்தின் ஜிப்ஸி மற்றும் டிரக் ஆகிய வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர்.
அப்போது, மறைந்து இருந்து பயங்கரவாதிகள் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற இரண்டு வாகனத்தின் மீது கண்மூடித்தன துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ராணுவ வீரர்கள் சிலர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். சந்தேகத்திற்குரிய இடத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான ராணுவ வாகனம் மற்றும் வீரர்களின் ஹெல்மட், ரத்தம் படிந்த தரை உள்ளிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நமது வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்தியாவைப் பாதுகாப்பதில் ராணுவ வீரர்கள் செய்த உச்சபட்ச தியாகத்தை நாடு எப்போதும் நினைவுகூரும். இந்த இக்கட்டான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். ரஜோரி - பூஞ்ச் எல்லை பகுதி அடர்ந்த வனமாக உள்ள நிலையில், பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அது ஏற்ற இடமாக மாறுவதாக கூறப்படுகிறது.
சம்ரெர் மற்றும் படா துரியன் வனத்தை ஒட்டிய பகுதிகளில் முகாம் அமைத்து பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்திற்கு தொடர் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : பராக் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி! வெளியான துப்பாக்கிச் சூட்டின் காரணம்?