திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் சிபிஐ(எம்) கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூன் 30) இரவு அடையாளம் தெரியாத நபர் வெடிகுண்டு வீசிய சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏகேஜி மையத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலர் இருந்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் இரவு 11.30 மணி அளவில் கட்டடத்திற்கு வெளியே பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டதாக கூறினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தினர். மேலும் உயர் அதிகாரிகள் குழு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சிசிடிவி கேமராக்களை சோதித்து பார்த்தனர். தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
AKG சென்டரின் அதிகாரபூர்வ ஊடகக் குழு சிபிஐ(எம்) வெளியிட்ட CCTV காட்சியில் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்த ஒரு நபர் கட்டடத்தின் மீது "வெடிகுண்டை" வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. வெடிகுண்டு ஏகேஜி மையத்தின் கல் சுவரில் பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூத்த சிபிஐ(எம்) தலைவரும், இடது சாரி ஒருங்கிணைப்பாளருமான EP ஜெயராஜன் சிபிஐ(எம்) தொண்டர்கள் அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். மேலும் இதில் காங்கிரஸ் கட்சி தொடர்பு இருப்பதாக சிபிஐ(எம்) தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இதனிடையே, நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி உள்ளிட்ட கேரள அமைச்சர்கள் பலர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த குண்டு வெடிப்பை கண்டித்து சிபிஐ(எம்) தொண்டர்கள் பலர் ஊர்வலம் நடத்தினர். பத்தனம்திட்டா மற்றும் மாநிலத்தின் பிற இடங்களிலும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தற்போது கேரளாவில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் காண விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டுக்கு வெள்ளிக்கிழமை வருகை தரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்து 3 இளைஞர்கள் உயிரிழப்பு - குடிபோதையில் பைக் ஓட்டியதால் நேர்ந்த சோகம்!