புதுச்சேரி: கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 26ஆம் தேதி முதல் வெளிப்புற சிகிச்சைகள் தற்காலிகமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிறுத்தியுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது, ”புதுச்சேரியில் கடந்த நான்கு வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, அதி தீவிர சிகிச்சையும், உயரழுத்த பிராண வாயு தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
அதனால் அதிக எண்ணிக்கையிலான மருத்துவப் பணியாளர்கள் அந்த நோயாளிகளை கவனிப்பதற்கு தேவைப்படுகிறார்கள். அதிதீவிர கரோனா நோயாளிகளை பாதுகாக்கவும், வெளிப்புற நோயாளி பிரிவிற்கு ஆலோசனைக்கு வரும் கரோனா தொற்று அல்லாத நோயாளிகளுக்கு கரோனா பரவும் அபாயத்தை தவிர்ப்பதற்கும், வரும் ஏப்ரல்26 ஆம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து வித நேரடி வெளிப்புற சிகிச்சைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
அதேசமயம் வெளிப்புற நோயாளிகளின் வசதிக்காக தொலைபேசி கலந்தாலோசனை வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை தவிர மற்ற அனைத்து விதமான சிகிச்சைக்காகவும் உள் அனுமதி நிறுத்தப்பட்டு, அவசர அறுவை சிகிச்சையைத் தவிர பிற அறுவை சிகிச்சைகள் குறைக்கப்படுகிறது.
இந்த கட்டுப்பாடுகள் நோயாளிகளை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவும், ஜிப்மரில் சிறப்பு அவசர தேவைகளுக்கு சுகாதார பணியாளர்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலி ஆக்சிஜன் டேங்கர்களை ஏற்றிச் சென்ற விமானப்படை விமானங்கள்