ஹைதராபாத்: இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினவிழா தெலங்கானா தமிழ்ச் சங்கம் சார்பில், ஐதராபாத், குக்கட்பள்ளியில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் விழா அரங்கில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.ஐதராபாத்தில் வாழும் தமிழர்கள் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் எம்.கே.போஸ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக தமிழ்ச் சங்கத்தின் மூலம் நடைபெற்று வருகிற தமிழ் வகுப்பு மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகளை தமிழ் வகுப்பு ஆசிரியர் ஜெயலட்சுமி மணிகண்டன், வகுப்பு ஒருங்கிணைப்பாளர் நிர்மலா ரவி ஆகியோர் மிகச் சிறப்பாக நடத்தினர்.
இதில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக கொடிகாத்த குமரனைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அவர் குறித்து புகழ்ந்து பேசியும், பாராட்டியும் விழாவைச் சிறப்பித்தனர்.
இவ்விழாவில், கடந்த மார்ச் மாதம் தமிழ் சங்கம் நடத்திய ‘உலக மகளிர் தின’ விழாவின் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மகளிருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டும் கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தெலங்கானா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் வழங்கப்பட்டன. பின்னர், தெலங்கானா தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளர் குணசேகரன் நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு நன்றி தெரிவித்தார்.
விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள் தருமசீலன், யுவராஜ், ராஜ்குமார், நேரு, குமாராராஜன், தட்சிணாமூர்த்தி, ராஜன்முத்துசுவாமி, வேல்முருகன், செல்வகுமரன், சாந்தகுமார், சரவணன், உமாகணேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: இணையவழி தமிழ் கற்பித்தல்: தெலங்கானா தமிழ்ச் சங்கத்தின் முயற்சி