ஐதராபாத் : தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கு நவம்பர் 30-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தெலங்கானா மாநிலத்தை பொறுத்தவரை மாநிலம் தொடங்கியது முதல் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்.(BRS) கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தொடர்ந்து பத்து ஆண்டு பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சிக் கட்டிலில் உள்ள நிலையில், நடப்பாண்டு தேர்தல் முடிவுகள் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களும் பி.ஆர்.எஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த முறை காங்கிரஸ் கட்சியின் கை சற்று ஓங்கலாம் என தனியார் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் :
பி.ஆர்.எஸ் | காங்கிரஸ் | ஏ.ஐ.எம்.ஐ.எம் | பாஜக | மற்றவை | |
---|---|---|---|---|---|
CNN | 48 | 56 | 05 | 10 | --- |
janki Baat | 40 - 55 | 48 - 64 | 04 - 07 | 07 - 13 | 00 |
TV9 | 63 | 21 | --- | 05 | 30 |
மாநிலம் உதயமானது முதல் ஆட்சியில் இருக்கும் பி.ஆர்.எஸ் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தேர்தல் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. காங்கிரஸ் - பி.ஆர்.எஸ் இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில், இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் பங்களிப்பும் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து கணிப்புகளின் படி தெலங்கானாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. அல்லது பி.ஆர்.எஸ். - ஏ.ஐ.எம்.ஐ.எம் கூட்டணி அமைத்து கூட்டணி ஆட்சி நடைபெறும் என கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டும் தேர்தல் கருத்து கணிப்புகள் பி.ஆர்.எஸ். கட்சிக்கு சாதகமாக அமையாத போதும், அக்கட்சி ஆட்சியை முழு மெஜாரிட்டியுடன் கைப்பற்றியது.
இந்த முறை அதுபோன்ற சூழலுக்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. மாறுதலுக்காக மக்கள் காங்கிரஸ் கட்சியை தேர்வு செய்யலாம் என கருத்து கணிப்புகளின் முடிவுகள் கூறப்படுகின்றன. யார் ஆட்சி அமைக்கப் போவது என்பது டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரிய வரும்.
இதையும் படிங்க : ஓய்ந்தது 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்.. ஆட்சியை இழக்கப் போவது யார்? கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!