ஹைதராபாத்: தெலங்கானாவில் டிஆர்எஸ் எம்எல்ஏக்களை தலா 100 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க பாஜகவினர் முயற்சித்தாக எழுந்த புகாரில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்தில் சைபராபாத் போலீசார் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நேற்று(அக்.29) இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மூவரையும் சிறப்பு நீதிமன்றத்தின் மூன்பு மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. அதன்படி இன்று கைது செய்யப்பட்ட மூவரும் சிறப்பு நீதிமன்றத்தில் மற்றொரு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, மூவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். அதேநேரம், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவை நிராகரித்தார். இதையடுத்து மூவரும் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே குதிரை பேரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக்கோரி, தெலங்கானா பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.