தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள நகராட்சித் தேர்தல்களில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவிட்-19 தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தை நீதிமன்றம் வெளிப்படுத்தியதுடன், வாக்குப்பதிவின்போது கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டது.
வாக்குச்சாவடிகளிலும், வாக்கு எண்ணிக்கையின்போதும் எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அளித்து, விரிவான அறிக்கையை ஏப்ரல் 29-க்குள் சமர்ப்பிக்க மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
வாரங்கல், கம்மம் மாநகராட்சிகள் - அட்சம்பேட்டை, சித்திப்பேட்டை, நக்ரேகரால், ஜாட்செர்லா, கோத்தூர் நகராட்சிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறுகின்றது.
தேர்தல் கோவிட் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அச்சம் தெரிவிக்கும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை மீறி மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதில் தீவிரம் காட்டிவருகிறது.
பாதிப்புகள், இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம், மீண்டும் மீண்டும் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும் ஏன் ஆர்டி-பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்று மாநில அரசிடம் கேள்வி கேட்டது.
கோவிட் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா சேவையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசைக் கேட்டுக்கொண்டது. இறந்த உடல்களைக் கொண்டுசெல்ல போதுமான எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்கள் இல்லாதது குறித்து நீதிமன்றம் தனது வேதனையை வெளிப்படுத்தியது
அரசு தனது அறிக்கையில் ஏப்ரல் 1 முதல் 25 வரை மொத்தம் 23.55 லட்சம் கோவிட் சோதனைகள் நடத்தப்பட்டதாகக் கூறியுள்ளது. சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அனைத்து விவரங்களுடனும் ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 5-க்கு ஒத்திவைத்தது.