ஐதராபாத் : இந்திய அரசியல் அமைப்பின் தந்தை எனக் போற்றப்படும் பீமாராவ் அம்பேத்கரின் 132வது பிறந்த தினம் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கரின் வெண்கல சிலை திறக்கப்பட உள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஹூசைன் சாகர் ஏரி பகுதியில் ஏறத்தாழ 11 புள்ளி 5 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியம், பூங்காஉள்ளிட்ட வசதிகளுடன் 125 அடி உயர அம்பேத்கர் சிலை கட்டமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஏறத்தாழ 146 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்பேத்கரின் சிலை உருவாக்கப்பட்டு உள்ளது.
மதியம் 2 மணி அளவில் தொடங்கும் இந்த விழாவில் முதலமைச்சர் கே.சி.ஆர் அம்பேத்கரின் சிலையை திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐதராபாத் நகரில் 125 அடி உயர அளவில் அம்பேத்கருக்கு சிலை திறப்பது மாநிலத்திற்கே பெருமையான தருணம் என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்து உள்ளார்.
இந்த விழாவில் ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விழாவில் சட்டமேதை அம்பேத்கரின் பெயரன் பிரகாஷ் அம்பேத்கர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளார். மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள் பாரதிய ராஷ்ரிய சமிதி கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா சட்டப் பேரவையில் தொகுதிக்கு 300 பேர் வீதம் சிலை திறப்பு விழா கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக ராட்சத அளவிலான சாமியானா பந்தல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. இதற்காக மாநில போக்குவரத்துக் கழகம் மூலம் 700க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : 'திமுக அரசு எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின் தடை ஏற்படுகிறது' - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!