புத்தாண்டை முன்னிட்டு தெலங்கானா மாநிலத்தின் அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , "இந்த சம்பள உயர்வு அரசு ஊழியர்கள், அரசு- உதவி பெறும் ஊழியர்கள், தினசரி கூலி ஊழியர்கள், பகுதிநேர படை ஊழியர்கள், வீட்டு காவலர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்களுக்கு பயனளிக்கும்.
மேலும், ஆஷா தொழிலாளர்கள், வித்யா தன்னார்வலர்கள், கிராமப்புற வறுமை ஒழிப்பு சங்கம் (எஸ்.இ.ஆர்.பி) ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்டோரும் பயன்பெறுவர். மாநிலத்தில் அரசு துறையில் பணியாற்றும் 9 லட்சத்து, 36 ஆயிரத்து, 976 ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்.
சம்பள உயர்வு காரணமாக தெலங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் (டி.எஸ்.ஆர்.டி.சி) நிதிச் சுமை ஏற்கப்படும் பட்சத்தில், அதனை மாநில அரசே ஏற்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு தவிர, ஓய்வு பெறுவதற்கான வயதை அதிகரிப்பது, பதவி உயர்வு வழங்குவது, இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவது, எளிமைப்படுத்தப்பட்ட சேவை விதிகளை வகுத்தல், ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மரியாதைக்குரிய பிரியாவிடை வழங்குதல் உள்ளிட்டவற்றையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பணியாளர் தொடர்பான அனைத்து பிரச்னைகளும் வரும் பிப்ரவரி இறுதிக்குள் தீர்க்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: நோய்த்தடுப்புக்கான சர்வதேச கூட்டணி வாரியத்திற்கு ஹர்ஷவர்தனின் பெயர் பரிந்துரை