பாட்னா: பிகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆர்ஜேடியுடன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து புதிய ஆட்சியை அமைத்துள்ளார். எட்டாவது முறையாக பிகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் நேற்று (ஆக. 10) மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், பிகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "ஐக்கிய ஜனதா தளம் கட்சியை அழிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டதால், நிதிஷ்குமார் அழுத்தத்தில் இருந்தார். அவர் அனைத்தையும் விளக்கியதால், நாட்டின் தற்போதைய நிலையை உணர்ந்து இந்த கூட்டணி முடிவை எடுத்தோம். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், விவசாயம் உள்பட அனைத்து துறைகளிலும், அனைத்து தரப்பினரும் முன்னேற்றமடைய எங்களது அரசு பாடுபடும். பாஜகவினர் மிகப்பெரிய மோசடிக்காரர்கள். அவர்களைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை, ஆனால் அவர்கள் விரைவில் பிகாரில் இருந்து காணாமல் போய்விடுவார்கள்.
கடந்த முறை பதினெட்டு மாதங்கள் மட்டுமே வேலை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அந்த குறுகிய காலகட்டத்திலும் நாங்கள் ஒரு பாராட்டத்தக்க வேலையைச் செய்தோம், அது அனைவருக்கும் தெரியும். இப்போது நாங்கள் அமைத்துள்ளதுதான் உண்மையான கூட்டணி. இந்த மிகப்பெரும் கூட்டணியை உருவாக்கியவர்கள் இருவர் மட்டுமே, ஒருவர் நிதிஷ்குமார் மற்றொருவர் ஏழைகளின் மீட்பர் லாலு பிரசாத் யாதவ்.
எந்தவொரு புதிய ஆரம்பத்திலும் பெரியவர்களிடம் ஆசி பெறுவது வழக்கம். அதன்படி, பதவியேற்கும் முன்பு எனது தாயின் பாதத்தை தொட்டு ஆசி பெற்றேன், எனது தந்தையிடம் வீடியோ கால் மூலம் ஆசி பெற்றேன்" என்று கூறினார்.