ஜம்மு&காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் கை மற்றும் கால்களில் இரும்பு சங்கிலி கட்டப்பட்டவாறு அமர்ந்திருந்துள்ளான். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் சம்பவம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீஸார் சிறுவனின் கை, கால்களில் கட்டப்பட்ட இரும்பு சங்கிலி மற்றும் அதற்கான காரணம் குறித்து விசாரித்துள்ளனர்.
அதற்கு அந்த சிறுவன் தனது பெற்றோர் பலுல்லியன் கிராமத்தில் உள்ள மதரஸா பள்ளியில் படிப்பதற்காக சேர்த்து விட்டதாகவும், அங்கு உள்ள ஆசிரியர் பிஷாந்த் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், இதனால் பயத்தில் மதரஸா பள்ளியில் இருந்து இரண்டு முறை தப்பி ஓடிய நிலையில், அந்த மதரஸா பள்ளி நிர்வாகத்தால் மீண்டும் பிடிபட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக சிறுவன் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனை தொடர்ந்து, மதரஸா பள்ளி நிர்வாகம் தனது கை மற்றும் கால்களில் இரும்பு சங்கிலி போட்டு கட்டியதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.
இதனை தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போலீஸார் சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் பிஷாந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுவன், ரஜோரி மாவட்டம் ஆந்த்ரூத் கிராமத்தை சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் சட்ட அதிகாரி ஷிவாங்கி காந்த், சிறுவனுக்கு நேர்ந்த இந்த சம்பவம் மிகவும் கவலைக்குறியது எனவும் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க அனைத்து வேலைகளும் நடந்து வருவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் தொடர் அமளி! ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட்!
மேலும், சிறுவனுக்கு நடந்த கொடுமை சாதாரணமானது அல்ல என விளக்கம் அளித்துள்ள ஷிவாங்கி காந்த் காவல்துறை தங்கள் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் சட்டரீதியான அடுத்த கட்ட நடவடிக்கையை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் குழந்தை மீது இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
"மசரஸா" இஸ்லாமியர்களின் மத நல்லிணக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கற்பிக்கப்படும் கல்விக்கூடமாக உள்ளது. நல்லிணக்கம், ஒழுக்கம் உள்ளிட்ட பல நல்ல காரணிகள் பயிற்றுவிக்கும் அங்கு இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரோவின் அடுத்த திட்டம்.. சிங்கப்பூரின் 7 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி56 ராக்கெட்!