ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. பல்வேறு நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், மே 28ம் தேதி வரை நடைபெறுகிறது. ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான ஓடிடி செயலியான ஜியோ சினிமா, பொழுது போக்குக்கான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத்தொடர்கள், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளையும் ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் டாடா ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா செயலியிலும், ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல் வார இறுதியில், ஐபிஎல் போட்டிகள் 147 கோடி பார்வைகளைக் கடந்துள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தரப்பில், "ஒரு பார்வையாளர் ஒரு போட்டியை குறைந்தபட்சம் 57 நிமிடங்கள் கண்டுகளித்துள்ளார். அதன்படி பார்த்தால், கடந்த சீசனை விட இந்த முறை ஜியோ சினிமா செயலியில், ஒரு போட்டியைக் காண ஒரு ரசிகர் கூடுதலாக 60 சதவீத நேரத்தைச் செலவிட்டுள்ளார்.
முதல் வார இறுதியில் ஐபிஎல் போட்டிகளை 147 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளன. கடந்த சீசன் முழுவதும் டிஜிட்டல் தளத்தில் பார்க்கப்பட்ட பார்வைகளை விட, கூடுதலான பேர், நடப்பு சீசனின் முதல் வார இறுதியில் போட்டிகளைப் பார்த்துள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வயாகாம் 18 ஸ்போர்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி அனில் ஜெயராஜ் கூறுகையில், "டிஜிட்டல் தளத்தில் ஐபிஎல் போட்டிகளை ஏராளமானோர் பார்த்து வரும் நிலையில், இது டிஜிட்டல் புரட்சிக்கான சான்றாகும். இந்த வாரம் டிஜிட்டல் மற்றும் ஜியோ சினிமாவின் செயல்திறன் மாற்றியமைக்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது" என்றார்.
மார்ச் 31ம் தேதி சென்னை - குஜராத் அணிகள் மோதிய ஆட்டத்தைக் காண ஒரே நாளில், 2.5 கோடி முறை ஜியோ சினிமா செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது. தற்போது வரை 5 கோடி ஜியோ சினிமா செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: CSK VS LSG: மிரட்டும் லக்னோ.. வெற்றிக் கணக்கை தொடங்குமா Yellow Army?