தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி(TMB), 100 ஆண்டுகள் பழமையான நம்பகத்தன்மை வாய்ந்த வங்கியாக செயல்பட்டு வருகிறது. தனியார் துறை வங்கிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐபிஓ(IPO - Initial public offering -ஆரம்ப பொதுபங்கு வழங்கல்) வெளியீட்டிற்கு பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி(Securities and Exchange Board of India - இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) கடந்த ஜூன் மாதம் அனுமதி வழங்கியது. இந்த ஐபிஓ மூலம் 1.58 கோடி பங்குகள் விற்கப்படவுள்ளதாக மெர்க்கன்டைல் வங்கி அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வரும் செப்டம்பர் 5ஆம் தேதி 832 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஐபிஓ வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பங்கு ஒன்றின் விலை 500 ரூபாய் முதல் 525 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மெர்க்கன்டைல் வங்கி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொதுப்பங்கு வெளியீடு செப்டம்பர் 5ஆம் தேதி, தொடங்கி 7ஆம் தேதி முடிகிறது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது.
75 விழுக்காடு முதலீடு நிறுவன முதலீட்டாளர்களிடமும், 15 விழுக்காடு நிறுவனமில்லாத முதலீட்டாளர்களிடமும், 10 விழுக்காடு சில்லறை முதலீட்டாளர்களிடமும் முதலீடு திரட்ட வங்கி முடிவு செய்துள்ளது. புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் அந்த வங்கி 36 கோடி வரை முதலீடு திரட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பங்குதாரர்களான பிரேம் பழனிவேல், பிரியா ராஜன், பிரபாகர் மஹாதியோ போப்டே, நரசிம்மன் கிருஷ்ணமூர்த்தி, எம். மல்லிகா ராணி, சுப்பிரமணியன் வெங்கடேஷ்வரன் ஐயர் ஆகியோரிடம் இருக்கும் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.